சென்னை: போக்குவரத்து நெரிசல் உட்பட பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, தேர்தல்களில் 100 சதவீதம் ஆன்லைன் வேட்புமனு தாக்கலை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 96.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய தேர்தல் கட்டமைப்பை கொண்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1993-ல் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, 1998-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 2014-ல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் மற்றும் வண்ண வாக்காளர் அட்டை ஆகியவற்றை அறிமுகம் செய்து, காலத்துக்கு ஏற்ப பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தேர்தலில் 100 சதவீதம் ஆன்லைன் வேட்புமனு தாக்கல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் ஊர்வலம்: சமீபகாலமாக வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மனு தாக்கல் நடைபெறும் நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நேற்றுகூட வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்தது. பாஜக வேட்பாளர் உள்ளிட்ட பிற கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலும் தாமதமானது. பல்வேறு கட்சியினரும் ஒரே நேரத்தில் அங்கு கூடியதால் பதற்றமான சூழலும் நிலவியது. அந்த அலுவலகம் அமைந்துள்ள சாலையில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதுபோல, வேறுசில பகுதிகளிலும் வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் வாக்குவாதம், மோதல்,தடியடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
எனவே காலத்துக்கு ஏற்ப, மனுதாக்கலிலும் 100% ஆன்லைன் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டலங்கள், கிராம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் இணைய சேவை மையங்கள் போன்றவற்றில் 2,284 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. எனவே, ஆன்லைன் மனு தாக்கல் முறையை அமல்படுத்தினால், ரூ.60 செலவில் வேட்புமனு தாக்கல் செய்துவிடலாம். ஆதார் ஒருமுறை கடவுச்சொல் (‘ஓடிபி’) அடிப்படையில் விண்ணப்பித்தால் ஆள்மாறாட்டமும் செய்ய முடியாது என்கின்றனர் வல்லுநர்கள்.
மக்களவையில் அனுமதி அளித்தால்: இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையே மக்களவையில் ஒப்புதல் பெற்றுதான் பயன்படுத்துகிறோம். எனவே, மக்களவையில் அனுமதி அளித்தால் மட்டுமே ஆன்லைன் வேட்புமனு தாக்கல் முறையை அமல்படுத்த முடியும். தேர்தல் ஆணையம் அறிவித்தால் அமல்படுத்துவோம்’’ என்றார்.
இதற்கிடையே, பொதுமக்கள் அளித்தமனுவின் அடிப்படையில், ‘போக்குவரத்து நெரிசல் உட்பட பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க,தேர்தல்களில் 100 சதவீதம் ஆன்லைன் வேட்புமனு தாக்கலை அமல்படுத்த வேண்டும்’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் வேட்புமனு தாக்கல் அமலுக்கு வந்தால், பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago