திருநெல்வேலி: "மக்கள் இடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்ட நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்" என்று திருநெல்வேலியில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதிசெய்யப் போகிறது. உங்கள் வாக்குதான் மனிதநேயமிக்க ஒருவரைப் பிரதமர் பொறுப்பில் உட்கார வைக்கப் போகிறது.தமிழகத்தை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால், அது உங்கள் ‘கை’யில்தான் இருக்கிறது. அதற்கு, பிரதமர் நரேந்திர மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
அதற்கு சமீபத்திய உதாரணம், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம். அந்த மாநில மக்கள், என்னென்ன கஷ்டப்பட்டார்கள். சொந்த நாட்டிலேயே அகதிகள் மாதிரி வாழ்ந்தார்கள். நம்முடைய எம்பிக்கள் குழு சென்று பார்த்தபோது, தாய்மார்கள் கதறினார்களே, அதையெல்லாம் மறக்க முடியுமா? அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழும் இந்தியாவை, வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள். அதை மனதில் வைத்து, அமைதியான, வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னால், குமரிக்கும், திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே, வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தீர்கள்? இரண்டு இயற்கைப் பேரிடர், அடுத்தடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் தாக்கியது.ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா? இல்லையே! நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினீர்களா? மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை, தர வேண்டியதை, உதவ வேண்டியதை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம்.
மத்திய அரசிடம் என்ன கேட்டோம்? மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள், அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று, இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு, மறு சீரமைப்பு, நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம், தந்தார்களா? இல்லை. நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம். பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம். இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், பாஜக எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது? ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு, செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் அதையும் ‘பிச்சை’ என்று ஏளனம் செய்வார்களாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. அதைக் கேட்பது மக்களின் உரிமை. மக்களாட்சியில் மக்களையே அவமதித்தபோதே உங்களின் தோல்வி உறுதியாகிவிட்டது.
ஒரே ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள். அப்போது தெரியும், மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று. அதற்குப் பிறகு, பிச்சை என்ற வார்த்தையே உங்கள் நினைவுக்கு வராது. ஆட்சி இருக்கிறது, பதவி இருக்கிறது, என்று பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் ஆணவமாகப் பேசலாமா? அதிலும் ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறினால், இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார்.
தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம், வெறுப்பு, வன்மம். மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகள் உள்ள நாம், நம்முடைய சகோதர,சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்.
தேர்தலுக்காக மட்டும் தமிழகத்துக்கு வரும் பிரதமரிடம் நானும் நீண்ட நாட்களாக ஒன்றைக் கேட்கிறேன். அதைத் திரும்பவும் கேட்கிறேன். பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்துக்காக உங்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சிறப்புத் திட்டங்கள் என்ன? என் கேள்விக்கு என்ன பதில்? பதில் கூறுங்கள்.தமிழகத்துக்கு என்று ஒரு சிறப்பு திட்டத்தின் பெயரைக்கூட சொல்ல முடியாமல், பத்தாண்டுகளாக எதைச் சாதித்தீர்கள்? ஆனால், எங்கள் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் திரும்பி வருகிறது. அதைக் கேட்கிறோமே, அதற்காவது பதில் வைத்திருக்கிறீர்களா? இல்லை அதற்கும் வாயாலே வடை சுடுவீர்களா?
தமிழகத்தையும், தமிழ் மக்களையும் உங்களை மாதிரி வெறுத்த, வஞ்சித்த ஒரு பிரதமர், இந்திய வரலாற்றிலேயே கிடையாது. நீங்கள் வடிக்கும் கண்ணீரை உங்கள் கண்களே நம்பாது, பிறகு எப்படி தமிழக மக்கள் உங்களை நம்புவார்கள்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்தீர்களே, நீங்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் அதுதான். அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது.உங்கள் குஜராத் மாடல் நிர்வாகத்துக்கு அதுதான் எடுத்துக்காட்டு.
சமீபத்தில் கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, ஒரு அபத்தமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்குத் திமுகவும் - காங்கிரசும்தான் காரணம் என்று கூறி இருக்கிறார். பத்து வருடமாக, திமுகவும் காங்கிரசுமா ஆட்சியில் இருக்கிறது? மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்ததை வேடிக்கை பார்த்தது உங்கள் ஆட்சிதான். தமிழக மீனவர்களை தாக்கி, கைது செய்து, படகுகள், வலைகளைப் பறித்து, சித்திரவதை செய்கிறது இலங்கைக் கடற்படை. 56 இன்ச் என்று இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறீர்களே, தமிழக மீனவர்கள் கைது செய்வதைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த, உங்களுக்கு ஏன் துணிச்சல் வரவில்லை? ஏன் தைரியம் இல்லை?
இலங்கையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார்கள் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் இதே கன்னியாகுமரியில் கூறினீர்களே, அதுமட்டுமா, அப்போது என்னவெல்லாம் கூறினீர்கள்? தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சோனியா காந்தியும், ஜெயலலிதாவும்தான் காரணம் என்று கூறினீர்கள். பத்தாண்டுகள் முடிந்துவிட்டதே, இப்போது பெயர்களை மட்டும் மாற்றி, திமுகவும் காங்கிரசும்தான் காரணம் என்று கூறுகிறார். பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்பதற்கு, இப்படி ஒப்புதலை அவரே தருகிறார். 2014-ல் இருந்து, 2024-க்குள் பத்து ஆண்டுகள்தான், தமிழக மீனவர்கள் மேல் வரலாற்றிலேயே, அதிக அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
நாங்கள் எத்தனை கடிதம் எழுதியிருப்போம். நம்முடைய எம்.பி.க்கள் எத்தனை முறை இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருப்பார்கள்? இலங்கை மாதிரியான அண்டை நாட்டைப் பார்த்தே, இந்தளவுக்கு பயப்படும் ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடியின் முழுநேர வேலை என்ன தெரியுமா? இன்றைக்கு நேருவை என்ன சொல்லித் திட்டலாம்? சோனியாவை வசை பாட முடியுமா? ராகுல் காந்தியைப் பார்த்து, பயம் இல்லாதது போல் எப்படி காட்டிக்கொள்ளலாம், என்பதுதான்.
எல்லாவற்றிற்கும் மேல், தேர்தலுக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவிடாமல் காங்கிரஸ் வங்கிக் கணக்கை முடக்கி, பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசைதிருப்பலாம். இதைத்தான் பிரதமர் மோடி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். மோடியின் ஆட்சி அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே சாதகமான ஆட்சி. ஆனால், நாம் அமைக்கப் போகும் இண்டியா கூட்டணி ஆட்சி எல்லோருக்கும் பொதுவான ஆட்சி.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே வரி, என்று ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறது பாஜக. இந்தப் பல்லவியை அனுமதித்தால், ஒரே ஒரு மனிதர் மன்னராக இருக்கும் ஆட்சியாக இந்தியா மாற்றப்பட்டு விடும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவற்றைப் பாதுகாக்கும் நமது அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். நாடு இப்படிப்பட்ட பேராபத்தில் சிக்கியிருக்கிறது. ஆனால் இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல், எந்தக் கொள்கையும் இல்லாமல், வளைந்த முதுகுடன் வலம் வருகிறார் பழனிசாமி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்து, நாட்டைப் படுகுழியில் தள்ளியுள்ள பிரதமர் மோடி பற்றியோ, பாஜக பற்றியோ கண்டித்துப் பேசத் தெம்பு இருக்கிறதா?
உங்களின் கள்ளக்கூட்டணி கபட நாடகத்தில்கூட பாஜகவை எதிர்ப்பதற்கான துணிவு இல்லையா? கேள்விக்குறிபோல் வளைந்தே இருப்பது, அவமானத்தின் அடையாளமில்லையா? பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று களமிறக்கப்பட்டிருக்கும் மறைமுக பாஜக வேட்பாளர்கள்தான், பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள். தமிழக மக்களிடம் மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களிடமும் செல்வாக்கை இழந்துவிட்டார் பழனிசாமி. சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்த கட்சி பழனிசாமியின் அதிமுக.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் திமுக சார்பில் நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியபோது, “எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்?” - என்று பாஜகவுக்கு டப்பிங் பேசியவர்தான் பழனிசாமி. இப்போது பாஜகவின் கதை திரைக்கதை, வசனம், இயக்கத்தில் தனியாகப் போட்டி போடும் கபட நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். நேற்று திருச்சியில் பேசிய பழனிசாமி, பாஜகவை விமர்சித்து அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தையாவது வந்ததா? இதுதான் கள்ளக்கூட்டணி. பாஜகவை விமர்சிக்காமல், எதிர்க்காமல், தமிழகத்தையே நாசப்படுத்த துணைபோகும் பழனிசாமி, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்று சபதம் எடுக்கிறார். தன்னுடைய விரல்களால் தமிழக மக்களின் கண்ணைக் குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல; வெற்றுச் சவடால்.
ஒன்று மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் விரோதமான கட்சி பாஜக. பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு. அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜக, தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக இரண்டுபேரையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.இந்தியாவின் எல்லை தொடங்கும் நம்முடைய குமரிமுனை இந்தியாவுக்கே “கை” காட்டி வழிகாட்டட்டும். இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் இந்த இடத்தில் இருந்து, பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது, ஜனநாயகமும் சகோதரத்துவமும் வென்றது” என்ற புதிய வரலாறு தொடங்கட்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago