52 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து வருபவரும், தேர்தல்களில் வேட்பாளராகவும், வேட்பாளர் முகவராகவும் களப்பணியாற்றிய வருமான அரசியலாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த பிரத்யேக நேர்காணல்: திருநெல்வேலி மாவட்டத்தில் குருஞ்சாங்குளம்தான் எங்கள் கிராமம்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், 1957-ல் இந்தியாவின் 2-வது பொதுத்தேர்தலில் இருந்து தேர்தலை பார்த்து வருகிறேன். அப்போது முதல் 1977-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு, 1991, 1996-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது.
சின்னங்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மஞ்சள், நீலம், சிகப்பு பெட்டிதான் இருக்கும். அந்த பெட்டியில்தான் ஓட்டு போட வேண்டும். எனது தந்தை கிராம முன்சீப்பாக இருந்ததால், வேட்பாளராக போட்டியிடுபவர்கள் எங்கள் வீட்டுக்கு தான் வருவார்கள். அந்த காலக்கட்டத்தில் எங்கள் பகுதியில் காங்கிரஸ் கட்சிதான் இருந்தது.
ராஜாஜியின் சுதந்திரா கட்சி, பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரளவு இருந்தன. திமுக பெரிய அளவில் இல்லை. அதேகாலக்கட்டத்தில் ஆலங்குளம் தொகுதியில் ஆலடி அருணா போட்டியிட்ட போது, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மூலம் அண்ணாதுரை பெற்ற உதயசூரியன் சின்னத்தின் நோட்டீசை முதலில் பார்த்தேன்.
அப்போது போஸ்டர்கள் எல்லாம் கிடையாது. தொகுதி, வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய டோர் சிலிப் தான் இருந்தன. தெருவில் சென்றும், வீடுகளுக்கு சென்றும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பார்கள். இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மாட்டு வண்டியில் வந்து பாடல்களை பாடுவார்கள். விடியவிடிய பிரச்சாரம் செய்வார்கள்.
மின்சாரம் இல்லாத பகுதிகளில் அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்குடன் பிரச்சாரம் நடைபெறும். 1962-களில் எங்கள் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்க்காவலன். பேருந்தில் தான் வருவார். எங்கள் ஊருக்கு பிரச்சாரத்துக்கு வந்த அவருக்கு மாற்று துணி கூட இல்லை. அந்த காலத்தில் அப்படி எல்லாம் எம்எல்ஏக்கள் இருந்துள்ளனர்.
இந்தியாவிலேயே கூட்டணி அரசியலை கொண்டு வந்தது திமுகதான். 1967 தேர்தலில் அண்ணாதுரை தலைமையிலான திமுக, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிளவுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, ம.பொ.சிவஞானம் (மபொசி) தமிழரசுக் கழகம், காயிதே மில்லத் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் அவர்களைவிட அதிகமான வாக்குகளை பெற்றும் பிளவுபடாத ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
குறைவான வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த விநோதம் அப்போது நடந்தது. விடிய விடிய பிரச்சாரம் செய்தாலும், மொத்த செலவு ரூ.3,000-க்குள்தான் இருக்கும். 1962-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இரா.செழியன் மொத்தம் ரூ.2,500 செலவு செய்து வெற்றி பெற்றார். அந்த காலத்தில் வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்றால், அவ்வளவு மரியாதை இருக்கும். வீடுகளின் வாசலில் கோலம் போடப்பட்டிருக்கும். மாலை போட்டு வேட்பாளர்களை வரவேற்பார்கள். காபி, டீ, சோடா கொடுப்பார்கள்.
சாப்பிடவில்லை என்றால் வருத்தப்படுவார்கள். டீ கடை பெஞ்ச் மீது ஏறி நின்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பார்கள். அப்போது எல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இல்லை. நானும் அரசியலுக்கு வந்து சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டியில் திமுக, மதிமுகவில் வேட்பாளராக நின்றுள்ளேன். ஓட்டுக்கு பணம் கொடுத்ததில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு கிராமத்திலும் தேர்தல் செலவுக்காக எனக்கு நன்கொடையாக பணம் கொடுப்பார்கள். இப்போது தேர்தலில் பல கோடிகளை வேட்பாளர்கள் செலவு செய்கின்றனர்.
ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் தேர்தலின் பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டே வருகிறது. 1990-ம் காலக்கட்டத்துக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தொடங்கியது. இன்று பணம் கொடுக்கும் கலாச்சாரம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, கட்அவுட் வைப்பது, பேனர் கட்டும் கலாச்சாரத்தை இந்தியாவுக்கே தமிழகம்தான் அறிமுகப்படுத்தியது. அரசியல் கட்சிகள் பணத்தை கொடுத்து பழக்கப்படுத்தியதால், மக்களும் அதற்கு அடிமையாகி ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கின்றனர். இடைத்தேர்தலுக்கு பல கோடிகளை செலவு செய்கின்றனர்.
காமராஜர், அண்ணாதுரை காலம் வரை தேர்தல் என்றால் கலாச்சாரம், பண்பாடு இருந்தது. சகோதர பாசம், நட்பு, தோழமையுடன் தேர்தல் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறலாம். சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், நேருவின் நெருங்கிய நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச் சாரி ஐயங்காராக இருந்தாலும், நாடார் மக்கள் அதிகம் வசிக்கும் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரை போலவே பலரும் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது. அதேபோல், கட்சியில் உழைத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. பல ஆயிரங்களை கடுத்து விருப்ப மனுக்களை வாங்குதல் மற்றும் வேட்பாளர் நேர்காணல் இல்லை. ஆனால், இன்று தேர்தல் வியாபாரம் ஆகிவிட்டது.
பணம், பசை இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. கட்சியில் பணி செய்ததை எல்லாம் பெரும்பாலும் கருத்தில்கொள்வதில்லை. பலருக்கு தகுதியே தடையாக உள்ளது. அதற்கு நானே உதாரணம். வரும் காலத்தில் தேர்தல் இன்னும் மோசமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago