கடும் போட்டிக்கு இடையில் காங். வேட்பாளரான கார்த்தி சிதம்பரம் - சிவகங்கையில் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சிவகங்கை: காங்கிரஸில் கடும் போட்டிக்கு இடையில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். மீண்டும் அவருக்கு சீட் கேட்டு காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி உட்பட 9 பேர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒய்.பழனியப்பன் ஆகியோரும் விருப்ப மனுக்களை கொடுத்தனர். இதனிடையே திருச்சி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அத்தொகுதி எம்பி திருநாவுக்கரசர் சிவகங்கையைக் கேட்டு வந்தார். 10-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை கொடுத்ததால் சிவ கங்கை தொகுதியைப் பெறுவதில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கே கட்சித் தலைமை மீண்டும் சீட் கொடுத்தது. அவர் ஏற்கெனவே 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினராக உள்ளார். 52 வயதான அவர் பிபிஏ, பிஎல் முடித்துள்ளார். அவரது தந்தை ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் 7 முறை வெற்றி பெற்று, மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தாயார் நளினி சிதம்பரம் பிரபல மூத்த வழக்கறிஞர். அவருக்கு மனைவி ஸ்ரீநிதி, மகள் அதிதி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE