திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க இறுதி அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாபூலத்தூரைச் சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘இந்திய ராணுவத்தில் திறமை மிகுந்த வீரர்களை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள சைனிக் பள்ளிதமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ளது.

இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு மூலம் 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வும் ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அமராவதியில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த பள்ளியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் அஜ்மீர், பெங்களூரு, பெல்காம், சால், தோல்பூரில் உள்ள ராணுவ பள்ளிகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு, அப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே அமராவதியில் உள்ள சைனிக் பள்ளிக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, உள்கட்டமைப்பை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல அமராவதி சைனிக் பள்ளியை நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியபள்ளியாக தரம் உயர்த்தவும், நுழைவுத்தேர்வை ஏற்கெனவே இருந்ததுபோல சென்னை உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் நடத்தவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கில் மத்திய, மாநில அரசுகள்தரப்பில் பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி விசாரணையை ஏப்.17-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE