வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல அடிக்கடி கூட்டணியை மாற்றும் பாமக: பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

சேலம்: வேடந்தாங்கல் பறவைகள்போல பாமக அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேடந்தாங்கல் பறவைபோல பாமக அடிக்கடி கூட்டணியை மாற்றிவருகிறது. ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அதுபோலத்தான் ராமதாஸும். ஏற்கெனவே பாஜகவுக்கு பூஜ்ய மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்த ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணியில் இணைந்து, பாஜக கூட்டணி வெல்லும் என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கும் கட்சிதான் பாமக.

அதிமுக கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணிக்கு கட்சிகள் வந்தால் வரவேற்போம். வராவிட்டால் சொந்த பலத்தில் தேர்தலை சந்திப்போம். மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்த, பொன்விழா கண்ட கட்சி அதிமுக. எங்கள் ஆட்சியில்தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. எனவே, கூட்டணியை நம்பி அதிமுக இல்லை.

மக்களவைத் தேர்தலில் ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் செலவு செய்கிறாரா, இல்லையா என்பதை பின்தொடர்ந்து சென்று பார்த்தால்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறுவது தவறான கருத்து. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சியினர் செலவு செய்வார்கள். குறிப்பிட்ட அளவு செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

திமுக ஆட்சியில் அதிக ஊழல்கள் நடந்துள்ளன. போதைப்பொருட்களை திமுக நிர்வாகிகளே வெளிநாடுகளுக்கு கடத்துவதாக செய்தி வெளியாகிறது. இந்த நிலையில், தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக வெற்றிபெற வேண்டும். சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி, அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தற்போது அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார். அவருக்கு மக்கள் தக்க தண்டனை வழங்குவர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE