காடுவெட்டி குரு மகன் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் @ கிருஷ்ணகிரி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி காடுவெட்டி குரு மகன் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த ஓசூர் வேளாண்மை அலுவலர் மும்மூர்த்தி தலைமையில் எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், தலைமை காவலர் அண்ணாதுரை, போலீஸ் சிவகாமி ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரிந்தது.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த கனலரசு (22) என்பதும், ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸார், கிருஷ்ணகிரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபுவிடம் ஒப்படைத்தனர்.

கனலரசு என்பவர் மறைந்த பாமக காடுவெட்டி குருவின் மகன் என்பது குறிப்பிடதக்கது. போலீஸாரிடம் கேட்டபோது, கனலரசு சொந்த செலவுக்காக ரூ.1 லட்சம் கொண்டு சென்றதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களை சமர்பித்துவிட்டு பணத்தை பெற்று கொள்ளலாம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE