“மாநிலக் கட்சிகளின் வாக்கு வங்கியை வீழ்த்துவதே பாஜக ‘ஊடுருவல்’ அரசியல்” - திருமாவளவன் நேர்காணல்

By பாரதி ஆனந்த்

சென்னை: “மாநிலக் கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைப்பதுபோல் ஊடுருவி, பின்னர் அவற்றின் வாக்கு வங்கியை நீர்த்தப்போகச் செய்து, தன்னை ஒரு வலுவான போட்டியாளராகக் காட்டிக் கொள்ளும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் அளித்த பதில்களில் சில...

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் இண்டியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? - “2024 தேர்தல் வழக்கமான தேர்தலைப் போன்றது அல்ல. தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் வேற்றுமைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்துள்ளனர். இண்டியா கூட்டணி என்பது ஒற்றை தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் உருவான கூட்டணி அல்ல. காங்கிரஸும், இடதுசாரிகளும் அதன் அங்கமாக இருந்தாலும் கூட இண்டியா கூட்டணி உருவாக்கத்தில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இண்டியா கூட்டணியின் இலக்கு, அதிகாரத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்துவதே.

இண்டியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே பொதுவான ஒரு புரிதலைக் கொண்டுள்ளன. அது, தேர்தல் முடிவுக்கு முன்னதாக எவரையும் பிரதமர் முகம் என்று அடையாளப்படுத்தாமல் இருத்தல் என்பதே. அதற்கான அவசியமும் இல்லை. மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் பாஜகவின் தோல்வியை உறுதி செய்யும். பிரதமர் வேட்பாளர் / முகம் யார் என்பது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம்.

தமிழகத்தில் இண்டியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலுமே வெற்றி பெறும். இந்தக் கூட்டணி இங்கு 2018-ல் இருந்தே வலுவாக உள்ளது. 2019-ல் பின்பற்றப்பட்ட தொகுதிப் பங்கீடு சூத்திரமே 2024-லும் பின்பற்றப்பட்டுள்ளது. சென்றமுறை அதிமுக, பாஜக, பாமக ஒன்றாக இருந்தன. இப்போது அவை பிரிந்துள்ளன. பாமக கடைசி நிமிடத்தில் பாஜகவுடன் கைகோத்துள்ளது. அதிமுக சில கட்சிகளுடன் தனித்து விடப்பட்டுள்ளது. அந்த சில கட்சிகளின் வாக்கு வங்கிக்கும் கூட எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருக்கிறது.”

ஆனால், பாஜக 400 தொகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கின்றனவே. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை இந்து மதம் மீட்டெடுக்கப்பட்டது போல் வட இந்தியா கொண்டாடுகிறது. அதனை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. இதன் மீது உங்கள் கருத்து என்ன?

“பாஜக இதேபோன்ற கோஷங்களுடன் பல ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் ஒருபோதும் தாங்கள் செய்த சாதனைகளைப் பற்றிப் பேசுவதில்லை. ஆர்எஸ்எஸ், பாஜகவின் மத உணர்வுகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் உத்தியை இந்துக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். இந்துக்கள் மத்தியில் பாஜகவின் மத அரசியலை பிரித்துப் பார்க்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், அவர்களின் திட்டம் தென்னிந்தியாவில் பலிக்காது. ராமர் கோயில் கும்பாபிஷேகம் 4, 5 வட இந்திய மாநிலங்களில் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.”

கூட்டணி அரசியலில் கொள்கை ஒற்றுமை பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள். அப்படியிருக்க தேர்தல் அரசியலையும் தாண்டி, திமுகவுடன் உங்கள் உறவுதான் என்ன - “திமுகவுடன் உறவில் இருப்பதால் நாங்கள் திமுகவுக்கு முழுமையாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. அதேவேளையில் நாங்கள் எதிர்க்கட்சி போலவும் இயங்கவில்லை. திமுகவுடனான எங்கள் உறவு பிரச்சினைகளின் அடிப்படையிலானது. கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசிக 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது. போலீஸ் தடைகளைத் தகர்த்துப் போராடியிருக்கிறோம். சாதிய வன்முறைகள், ஆணவக் கொலைகளை எதிர்த்துப் போராடியுள்ளோம். வேங்கைவயல் விவகாரத்தில் சம்பவம் நடந்த மூன்றே நாட்களில் நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

நாங்கள் மக்களின் பக்கம் நின்கிறோம். பல்வேறு பிரச்சினைகளிலும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியிருக்கிறோம். தலித்துகளுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகளையும் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவப் படுகொலைகளை சுட்டிக் காட்டி வருகிறேன். மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நாங்கள் காட்டும் நியாயமான எதிர்ப்பால் எங்களுக்குள்ளான கூட்டணியில் விரிசல் வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை நாங்கள் முன்னிலைப்படுத்திக் குரல் கொடுக்கிறோம்.”

அதிமுக தனித்து விடப்பட்டுள்ளதாகக் கூறினீர்கள். அப்படியென்றால் பாஜக தமிழகத்தில் வளர்கிறது என்று புரிந்து கொள்ளலாமா? - “இது பாஜகவின் செயல்திட்டங்களில் ஒன்று. அக்கட்சி ஒரு மாநிலத்துக்குள் நுழைவதென்றால், அங்குள்ள பிரதானக் கட்சியுடன் முதலில் கூட்டு சேரும். பின்னர் அந்தக் கட்சிக்குள் மெதுவாக ஊடுருவி, அந்தக் கட்சியையே நீர்த்துப்போகச் செய்துவிடும். இவ்வாறாக, மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்து தங்களை இரண்டாம் இடத்தில் நிறுத்திக் கொள்ளும் உத்தியை பாஜக பல மாநிலங்களிலும் பயன்படுத்தி வருகிறது. நான் இதனை அதிமுகவிடம் நட்புரீதியிலாகவே எடுத்துரைத்திருக்கிறேன். ‘நீங்கள் பாஜகவுடன் நீண்ட காலம் பயணித்தால் உங்கள் கட்சி நீர்த்துப்போகச் செய்யப்படும்’ என்று அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறேன்.

அண்ணா, ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை விமர்சித்தபோது, பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டபோது நான் அதனை வெகுவாக வரவேற்றேன். ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற அதிமுகவுக்கு அதுமட்டுமே வலுவான காரணமாக இருந்திருக்காது என நான் நினைக்கிறேன். அதிமுகதான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதா? இல்லை, அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா என்பது பற்றிய உண்மை எமக்குத் தெரியாது. ஆனால், அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் உத்தி. அதன்மூலம் தேர்தலில் தன்னை இரண்டாம் இடத்தில் நிறுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது.”

2026-ல் பாஜக இரண்டாம் நிலைக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - “பாஜக அப்படிச் செய்ய வேண்டும் என்று இலக்குடனேயே இயங்குகிறது. ஆனால், அதிமுக வாக்கு வங்கி இன்னும் பலமாகத்தான் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி ஆளுமை இல்லாவிட்டாலும், அக்கட்சியானது 60-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுகவில் இருந்து சிலர் வெளியேறியிருந்தாலும் கூட அக்கட்சி வலுவானதாகவே இருக்கிறது. இந்தத் தேர்தலின் முடிவில்தான் அதிமுக தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டுள்ளதா அல்லது வாக்குகள் சிதறி அடுத்த பக்கத்துக்குச் செல்கிறதா என்று பார்க்க வேண்டும்.”

தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - “அது தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது. ஒருவேளை ஒரு சில தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றால் பாஜகவுடன் கூட்டு சேரலாம்.”

அம்பேத்கர் கற்பனை செய்த தலித் ஒற்றுமை இன்னும் கைகூடவில்லையே. தலித் ஒற்றுமைக்கு என்ன செய்யலாம்? தமிழகத்தில் அப்படியான ஒன்றுபடுத்துதல் நடந்துவிட்டது என நீங்கள் நினைக்கிறீர்களா? - “இந்தியா முழுமைக்கும் சாதி இந்துக்கள் ஒரு துருவமாக இருக்கிறார்கள். அவர்கள் சாதி ரீதியாக பிரிந்திருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையிலேயே சாதியம் அவர்களுக்குப் புகட்டப்படுகிறது.

தலித்துகள் என்பவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைத் துறக்க விரும்புபவர்கள். இந்தியாவில் சாதி ஒழிப்புக்குக் குரல் கொடுப்பவர்களாக தலித்துகளும், அம்பேத்கர் பின்பற்றாளர்களும் மட்டும்தான் இருக்கிறார்கள். சமூகத்தின் மற்ற பிறிவினருக்கும் சாதி ஒழிப்பில் எந்தத் திட்டமும் இல்லை. தலித்துகள் ஒருபோதும் சாதி ரீதியாக ஒன்றிணைய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் சாதிய அடையாளத்தை விட்டொழிக்கவே விரும்புகிறார்கள்.

காந்தி, நேரு, இந்திரா காந்தி, ஜக்ஜீவன் ராம் போன்ற தலைவர்களை தலித்துகள் சமமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சாதி இந்துக்கள் சாதி ரீதியிலான மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு தலைவரை பின்பற்ற அவர்களுக்கு சாதிய மனோபாவம் மேலோங்குகிறது. உத்தரப் பிரதேசத்தில் கன்சிராம் அதனை உடைத்தார். சாதி அடிப்படையில் இல்லாமல் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் என ஏதேனும் வகையில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் பகுஜன்-களாக ஒருங்கிணைத்தார்.

ஆகையால், தலித் ஒற்றுமை என்று தனிப்பட்ட முறையில் ஏதுமில்லை. தேவை என்னவென்றால், தலித்துகளில் அரசியல் எழுச்சி. சாதி ரீதியிலான ஒற்றுமை என்று ஏதுமில்லை. அது கொள்கை ரீதியிலான ஒற்றுமையே. தலித் ஒற்றுமை என்பது புதிய தமிழகம் கட்சியுடனோ அல்லது தேவேந்திர குல வேலாளர்களுடனோ, ஆதி திராவிடர்களோடு, அருந்ததியர்களோடு விசிக ஒன்று சேருவது அல்ல. தலித் ஒற்றுமை என்பது கருத்தியல் உடன்படிக்கையோடு ஒன்றிணைந்து உயர்வது. உண்மையில், தலித்துகளுக்கு அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது.”

நிறைய அரசியல் கட்சிகள் பல நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளன. ஆனால், நீங்கள் ஏன் பாஜகவை மட்டும் தனித்து சுட்டிக் காட்டுகிறீர்கள்? - “இதற்கான வாய்ப்பும், இடமும் பாஜக அதனை சட்டபூர்வமாக்கியதால் தானே உருவானது. இந்த பத்திரங்கள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக சலவை செய்து கொள்ள முடிகிறது. உச்ச நீதிமன்றமே இது சட்டபூர்வமாக தவறானது எனச் சொல்லிவிட்டது.”

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - “அதீதப் பெரும்பான்மையுடன் அமையும் ஓர் அரசு எதேச்சிதகார அல்லது பாசிச அரசாக மாறும் வாய்ப்பே அதிகம். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட தேசம். அதை உயிர்ப்புடன் வைக்க நமக்கு ஒரு ஜனநாயக அரசு வேண்டும். நிலையான அரசு என்பதைவிட ஜனநாயக அரசே அதற்குத் தேவை. நிலையான எதேச்சதிகார அரசு, மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தால் அவற்றைக் கலைக்க முற்படும். அது நாடாளுமன்ற ஜனநாயக முறையையே அர்த்தமற்றதாக்கிவிடும்.” இவ்வாறாக திருமாவளவன் மக்களவைத் தேர்தல் தொடங்கி தலித் எழுச்சி வரை பல்வேறு விஷயங்கள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்