ஆட்சி, அதிகார உச்சத்தில் இருந்த ஓபிஎஸ் சுயேச்சையாக களம் காணும் பரிதாபம்!

By எஸ்.ஸ்ரீனிவாசகன்


ஜெயலலிதாவின் விசுவாசி, 3 முறை தமிழக முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அரசியல், அதிகார உச்சத்தை அடைந்தவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலை நாளுக்கு நாள் கீழிறங்கி, ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் களம் காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்(73). தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் டீ கடை நடத்தி வந்தார். எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறியபோது அதிமுகவில் சாதாரண தொண்டராக தனது அரசியல் பயணத்தை 1973-ல் தொடங்கினார். 1996-ல் பெரியகுளம் நகராட்சி தலைவரானார். மக்களவைத் தேர்தலில் பெரியகுளத்தில் டிடிவி.தினகரன் போட்டியிட்டபோது அவருடன் மிக நெருக்கமானார்.

போடி சட்டப்பேரவையில் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக தேர்வானார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதிமன்ற உத்தரவால் பதவி இழந்த சூழலில் 2001-ல் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரது அமைதியான தோற்றம், பணிவு, செயல்பாட்டை அறிந்தே ஜெயலலிதா முதல்வர் பதவியை அளித்தார். சொத்து குவிப்பு வழக்கில் 2014-ல் ஜெயலலிதா தண்டனை பெற்றபோதும், 2016-ல் ஜெயலலிதா மரணடைந்த போதும்அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வமே முதல்வரானார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நிதி, பொதுப்பணி, மதுவிலக்கு, வருவாய் என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் என தொண்டர்களால் அழைக்கப்பட்டார். 2006-ல் திமுக ஆட்சியின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து கட்சியை வழிநடத்தியவர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் ஓபிஎஸ் சில எம்எல்ஏ.க்களுடன் வெளியேறி, மீண்டும் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராகி தனது செல்வாக்கு, பின்புலத்தை அழுத்தமாக நிரூபித்தவர். டி.டி.வி.தினகரன், சசிகலாவை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்தார். பிரதமர் மோடியுடன் மிகுந்த நெருக்கத்துடன் இருந்தார். அரசியல், அதிகார மாற்றங்கள் பலமுறை நடந்தபோதிலும் ஓபிஎஸ் தனக்கென தனி செல்வாக்குடன் இருந்ததை தொடர்ந்து உறுதிப்படுத்தினார்.

இதுவே அவரது தனி அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. பழனிசாமி முதல்வராக இருந்த போதே கட்சி, ஆட்சி அதிகார விஷயங்களில் பலமுறை ஓபிஎஸ் மூலம் நெருக்கடியை சந்தித்தார். இந்த மோதல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. இதற்கு காரணம் யார் என்பதில் ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் பரஸ்பரம் குற்றம்சாட்டினர்.

இதற்கு மூல காரணம் யார் பெரியவர் என்ற கவுரவமும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமே. இப்பிரச்சினை நாளுக்குநாள் பெரிதாக வெடிக்க, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்பட்டார் ஓபிஎஸ். இதிலிருந்து அவரது வீழ்ச்சி ஆரம்பமானது. பல பதவிகள், கட்சி அதிகாரம், சின்னம், ஆதரவாளர்கள் என தொடர்ந்து பல்வேறு இழப்புகளை சந்திக்க தொடங்கினார் ஓபிஎஸ். கட்சி, சின்னத்தை முடக்குவதில் நீதிமன்ற தீர்ப்புகளும் ஓபிஎஸ்க்கு தொடர் பின்னடைவையே ஏற்படுத்தின.

அதிமுக கே.பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளியேறினர். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை உருவாக்கி சமாளித்தார். டிடிவியுடன் ஓபிஎஸ் இணைந்து கொண்டார். சசிகலாவுடன் இணையும் முயற்சி தோல்வியடைந்தது. பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டுடன் இருந்த ஓபிஎஸ் எதையாவது சாதித்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.

இதற்கு நேர் மாறாக பிரதமர் பங்கேற்ற பிரச்சார மேடை, கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என எதிலும் ஓபிஎஸ்க்கு பாஜகவில் முன்னுரிமை கிடைக்காதது ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஓபிஎஸ்க்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் உருவாகிவிடுமோ என ஓபிஎஸ் முகாம் நிலைகுலைந்தது. இந்த சூழலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக களம் காணப்போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

3 முறை முதல்வராக இருந்தவர், தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்தவர், அதிமுகவை கைப்பற்றவும், இரட்டை இலையை முடக்கவும் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் மீது ஆதரவாளர்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. அவரது அடுத்த நகர்வு எதை நோக்கியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்