பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் அமைச்சர் ஆனார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி நேற்று மாலை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை அவர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடந்த 11-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக சட்டப்பேரவை செயலகம் கடந்த 13-ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர்ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அன்றைய தினமே பரிந்துரை கடிதம் அனுப்பினார். மறுநாள் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், 16-ம் தேதி சென்னை திரும்பினார்.

இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தில், ‘பொன்முடிக்கான தண்டனை நிறுத்திதான் வைக்கப்பட்டுள்ளது. அவர் விடுவிக்கப்படவில்லை. எனவே, அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில்உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

நேற்று முன்தினம் (மார்ச் 21) இந்த வழக்கு விசாரணையின்போது, ஆளுநரின் செயல்பாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடுமையாக விமர்சித்தது. இதில் ஆளுநர் 24 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு நாள் கெடு விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, 22-ம் தேதி (நேற்று) மாலை ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

முதல்வருக்கு கடிதம்: மாலை 3.30 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் எழுதினார். ‘முதல்வர் கடந்த 13-ம் தேதி எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடிக்கு பொறுப்பு வழங்க ஒப்புதல் அளிக்கிறேன். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர், கிராம தொழில்கள் துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்குகிறேன்’ என்று அதில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தபோது, அவர் வகித்த உயர்கல்வித் துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது. ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர், கிராம தொழில்கள் துறை, அமைச்சர் காந்தியிடம் வழங்கப்பட்டது. தற்போதுஅந்த துறை மீண்டும் ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது.

எளிமையாக நடந்த நிகழ்ச்சி: ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் நேற்று மாலை 3.24 மணிக்கு வந்தனர். 3.30 மணிக்கு அமைச்சராக பொன்முடி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையின் உள் அறையில் எளிமையாக 8 நிமிடங்களில் நிகழ்ச்சிநடந்து முடிந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்நோக்கம் இல்லை: ஆளுநர் தரப்பு விளக்கம் - பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 24 மணி நேரத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி, ‘‘பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணமோ, உள்நோக்கமோ ஆளுநருக்கு இல்லை’’ என்று பதில் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, திமுக மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், ‘‘நாடாளுமன்ற ஜனநாயகம் உங்களால்தான் நிலைத்திருக்கிறது’’ என தலைமை நீதிபதியை புகழ்ந்தனர். அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் புன்னகையுடன் தலையசைத்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE