நீண்ட இழுபறிக்கு பிறகு... - எம்.கலியபெருமாள் தி.மலை அதிமுக வேட்பாளராக ஆனது எப்படி?

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: நீண்ட இழுபறிக்கு பிறகு, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஒன்றியச் செயலாளர் எம்.கலியபெருமாள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திகழ்கிறார். திமுகவில் முன்னணி தலைவர்களின் வழி தடத்தை கடந்து பயணிக்கிறார். சென்னை நீங்கலாக வட தமிழகத்தில் கட்சி மற்றும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தனது சொந்த மாவட்டமான, திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வருகிறார். தேர்தல் களத்தில் ஆட்சி பலம், அரசியல் பலம், பண பலம் என அனைத்திலும் வலிமையாக உள்ளார்.

இவரது ‘ஆசி’யில் போட்டியிட கூடிய வேட்பாளர்களை எதிர்ப்பது என்பது, எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதன் தாக்கம், திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே எதிரொலித்துள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 104 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், விருப்ப மனு தாக்கல் செய்யாதது, ரத்தத்தின் ரத்தங்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரிடம், கட்சி தலைமை கேட்டுக்கொண்டும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

முயற்சி பலனளிக்கவில்லை: அதே நேரத்தில், தேசிய அரசியலில் பங்கேற்பதை விட, மாநில அரசியலில் பங்கேற்பதையே விரும்புவதாக, கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதேபோல், திருப்பத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி. ரமேஷ், தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கட்சி தலைமை விரக்தி அடைந்தது.

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கலியபெருமாள், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகனான மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் மக்களவை உறுப்பினர் வனரோஜா, மாவட்ட இணை செயலாளர் சஹானா, மாணவரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் அழைக்கப்பட்டனர். கடந்த 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ( முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ) போட்டியிட்ட பெண் வேட்பாளர் வனரோஜா வெற்றி பெற்றார்.

அதேபாணியில் பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆலோசனை நடைபெற்றது. இதில், நேர்காணலில் பங்கேற்ற 2 பெண்கள் ( வனரோஜா, சஹானா ) மீதும், கட்சி தலைமைக்கு நம்பிக்கையை கொடுக்கவில்லை. மாற்று ஏற்பாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பலனளிக்க வில்லை. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியச் செயலாளர் தென்மாத்தூர் எம்.கலியபெருமாள் போட்டியிடுவார் என நேற்று வெளியான 2-வது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர். இவரது வயது 53. இவருக்கு கீதா என்ற மனைவியும், இந்துமதி, மதுமதி ஆகிய 2 மகள்கள், சிவா என்ற மகனும் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் அருகே உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் இவர் கடந்த 1989-ல் இருந்து கட்சி உறுப்பினராக உள்ளார்.

ஒன்றிய மாணவரணி இணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலாளர், அழகானந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிகளைவகித்தவர். ஒப்பந்ததாரரான இவர், மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் இறங்குகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில், தேர்தலில் போட்டியிட கட்சியினரிடையே இருந்த போட்டியை, இத்தேர்தலில் காணமுடியவில்லை என்பது நிதர்சனம்.

முன்னாள் அமைச்சர்கள் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி (இருவரும் மாவட்டச் செயலாளர்கள்) இணைந்து பணியாற்றினால் கோடைகால வெயிலிலும் இரட்டை இலை மலரும் என்ற நம்பிக்கையுடன் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கின்றனர். இவர்களது நம்பிக்கை நிறைவேறுமா? என்பது வரும் ஜுன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்