புதுடெல்லி: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.
» டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது
» ‘கேஜ்ரிவால் கைது... சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
ஆளுநர் நிராகரிப்பு: இதையடுத்து, எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி,அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன்: பொன்முடிக்கு தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள்: ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார். ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி,எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஆனால், அதை இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சத்தம்போட்டு கூற விரும்பவில்லை.
ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஒருதண்டனையை நிறுத்தி வைக்கும்போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா. மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றாவிட்டால், மாநில அரசு என்ன செய்யும்.
ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி: இந்தவழக்கை 22-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்க வேண்டும். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்.
பி.வில்சன்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நாங்கள் இவ்வாறு நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமா?
நீதிபதிகள்: குற்ற வழக்குகளில் நீதிமன்றம் தண்டனை விதித்து பிறப்பிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் இழந்த பதவி தானாக வந்துவிடும்தானே.
தமிழக அரசு தரப்பு: பொன்முடி விவகாரத்தில் ஆளுநர்தான் தவறு இழைத்துள்ளார். இவ்வாறு வாதம் நடந்தது.
இன்று மீண்டும் விசாரணை: இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப்போவது இல்லை’’ என்று கெடு விதித்து விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago