தமிழக இளைஞர்கள் பயிற்சி பெற ரூ.40 கோடியில் துப்பாக்கி சுடும் தளங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதற்காக ரூ.40 கோடி செலவில் துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்றெடுத்த 64 பதக்கங்களில், 17 பதக்கங்கள் துப்பாக்கிச் சுடும் போட்டிகள் மூலம் கிடைத்தன. அதே சமயத்தில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர்கூட பங்குபெறவில்லை.

இந்த நிலையில், சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும்வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியை பெறுவதற்கான கூடுதல் வசதிகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்துக்குப் பிறகு, துப்பாக்கிச் சுடும் பயிற்சியினை இளைஞர்கள் பெறும்வகையில், ரூ.40 கோடி மதிப்பில் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

தற்போது வீராபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மின்னணு வசதியுடன் கூடிய தடங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ரூ.18 கோடி செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள், 25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என மொத்தம் 240 தடங்கள் அமைக்கப்படும்.

இறுதிப் போட்டிக்காக, 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள் ஏற்படுத்தப்படும். சுடுதளத்துக்கான கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ரூ.16 கோடி செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதலுக்குரிய உபகரணங்கள் வாங்கப்படும். இது தவிர, ரூ.2 கோடி செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் தளத்துக்கான உபகரணங்கள் வாங்கப்படும்.

கோவை மதுரை பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த இரு இடங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா ரூ.2 கோடி வீதம் ரூ.4 கோடி மதிப்பில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் பெருவாரியான துப்பாக்கிச் சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் மேற்கண்ட நடவடிக்கைகள் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE