முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் வாரிசு போட்டி - ‘விஐபி தொகுதி’ ஆன நீலகிரி!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: இந்நாள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் மகன் என விஐபி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என ஆறு சட்டப்பேரவை தொகுதிககள். இதில், உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் நீலகிரி மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.

திமுக சார்பில் 2009ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைக்கான தேர்தலில் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஜூன் 2009-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் எழுந்த 2ஜி விவகாரத்தில், தனது அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தார்.

2014-ம் ஆண்டு இரண்டாம் முறையாக நீலகிரி மக்களைத் தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டார். இதனால், நீலகிரி தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.பின்னர் மூன்றாவது முறையாக 2019-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராசாவுக்கு எதிராக பாஜக காய் நகர்த்த தொடங்கியது. இதனால், மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டாகவே அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் பேச்சு இருந்து வந்தது. அதற்கேற்ப, கட்சியினரும் முருகனை முன்னிறுத்தியே கட்சியை வளர்த்தனர். இதை உறுதிப்படுத்துவது போன்று அமைச்சர் எல்.முருகன், தொடர்ந்து நீலகிரி மக்களவைத் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, மக்களை சந்தித்தார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதகையில் தனது முகாம் அலுவலகத்தை எல்.முருகன் திறந்தார். இந்நிலையில், கடந்த மாதம் ராஜ்ய சபா எம்.பி.யாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, 'நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக, சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. 'முருகன் தான் களமிறங்குவார்' என, கட்சியினர் கூறி தேர்தல் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், தற்போது எல்.முருகன் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுகமான இவர் அதிமுக சார்பில் எம்.பி. தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.முன்ளாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர் மகன் என நீலகிரி மக்களவைத் தொகுதி விஜபிகளின் களமாக மாறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE