பாஜகவிடம் கேட்பதோ 3... கிட்டுவதோ 1... ஓபிஎஸ் தர்மயுத்தம் இனி எங்கே?

By நிவேதா தனிமொழி

சென்னை: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக உட்பட 9 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பா.ம.க. - 10 தொகுதிகள் த.மா.கா - 3 தொகுதிகள், அ.ம.மு.க. - 2 தொகுதிகள், புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்) - 1 தொகுதி, இந்திய ஜனநாயக கட்சி (பாரிவேந்தர்) - 1 தொகுதி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன்) - 1 தொகுதி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்) - 1 தொகுதி இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஓபிஎஸ் அணி இதுவரை அந்தரத்தில் நிற்கிறது.

ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியிலும் , பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக பாஜக தலைமை இன்று அறிவித்தது. முன்னதாக, பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மூன்று தொகுதிகளைக் கேட்ட நிலையில், அவருக்கு ஒரு தொகுதியை மட்டுமே பாஜக ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு தொகுதிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் நெருக்கடியில் இருக்கிறார்.

குறிப்பாக, வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

பாஜக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை மற்றும் கூட்டணி வழங்கிய எண்ணிக்கையைக் கணக்கிட்டால், பாஜக கூட்டணியில் ஓபிஎஸுக்கு ஓர் இடம் என்பது உறுதியாக தெரிகிறது. எனவே, ஓபிஎஸ் முன்வைத்த தொகுதிகளைக் கொடுக்காமல் பாஜக எண்ணிக்கையைக் குறைத்ததால் ஓபிஎஸ் அள்ளாடி வருகிறார். பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், எங்கு தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்துவார் எனத் தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE