தேர்தல் பிரச்சாரத்துக்காக சேலத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த மோடி: நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் காங்கிரஸ் மனு

By செய்திப்பிரிவு

சேலம்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செந்தில் மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சேலத்துக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் வந்தன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியது, சட்டப்படி குற்றமாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ல் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதால், தேர்தல் ஆணையத்தால் அவரது பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, பிரதமர், முதல்வர் உள்பட எந்த தலைவரும், தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

தேர்தல் காரணங்களுக்காக சேலம் மாநகராட்சி மேயர், துணைமேயர் ஆகியோரது அதிகாரப்பூர்வ வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதே விதி பிரதமருக்கும் பொருந்தும். எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது விசாரணை நடத்தி, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். இதனிடையே, புகார் அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரின் கார் ஒன்றில், ராட்டை சின்னத்துடன் இருந்த கட்சிக் கொடியை, போலீஸார் உத்தரவின்பேரில் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE