கனிமொழி ஆதரவு, அரசு மருத்துவர்... தென்காசி திமுக வேட்பாளராக ராணி ‘டிக்’ ஆனது எப்படி?

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக யாரும் எதிர்பாராத வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆதரவில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி மக்களவைத் தொகுதியில் 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக முதல் முறையாக தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், தற்போதைய எம்.பியுமான தனுஷ் குமார், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உட்பட 40க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

இதில் தனுஷ் குமாருக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆதரவும், முத்துசெல்விக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆதரவும், தென்காசி மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஆதரவில் சிவகிரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆதரவில் தொழிலதிபர்கள், திமுக நிர்வாகிகள் தென்காசி தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு மருத்துவர் ராணி தென்காசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது திமுக நிர்வாகிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்ததாரரான அவரது கணவர் ஶ்ரீகுமார் தென்காசி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் 6 பேரில் ஒருவராக உள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆதரவில் ராணி தென்காசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணிக்கு, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்பி தனுஷ் குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரான எம்எல்ஏ ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “எம்.பி தனுஷ் குமார் மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட போதும், கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை. இதனால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் பலர் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பினர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ராமசந்திரன் ஆதரவில் தனுஷ் குமார் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் பரிந்துரையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் மாவட்ட அமைச்சர், மாவட்டச் செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என உள்ளூர் நிர்வாகிகள் பரிந்துரை செய்யாத நிலையில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆதரவில் சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு மருத்துவர் ராணி தென்காசி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இது திமுக நிர்வாகிகள் பலருக்கும் ஆச்சரியத்தையும், முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கனிமொழி தென்மாவட்டத்தில் முக்கிய அதிகார மையமாக வளர்ந்து வருகிறார் இது தெரிகிறது. வேட்பாளர் தேர்வு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தலைமையின் உத்தரவு கட்டப்பட்டு, அவரை வெற்றி பெறச்செய்ய தீவிர களப்பணியாற்றுவோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE