கடலூர், மயிலாடுதுறை, நாகை தொகுதிகளில் திமுகவினர் அதிருப்தி

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் திமுக கூட்டணியின் தொகுதிகள் எவை எவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, ஐயுஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் அனைத்தும் அடுத்தடுத்த மாவட்டங்களாக உள்ளதோடு, நெருக்கமாக உள்ள தொகுதிகள் ஆகும். இதனால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினர் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், இந்தப் பகுதியிலிருந்து மக்களவைக்குச் செல்லக் கூடிய நபர்கள் யாரும் இல்லையா என்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்.

ஆனால், கூட்டணிக் கட்சியினரோ, கடலூர் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் போட்டியிடுவார் என்பதாலும், மயிலாடுதுறையில் ராகுல் காந்தியின் நடைபயணப் பிரச்சாரத்தை வகுத்த பிரவீன் என்பவருக்கும், புதுச்சேரி காங்கிரஸுக்கு சாதகமான தொகுதி என்பதால் கேட்டு வாங்கியிருப்பதாகவும், விழுப்புரம், சிதம்பரம் ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் இருப்பதாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்றதாலும் அதே தொகுதிகள் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தனர்.

இந்தத் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்க முக்கியக் காரணம், இப்பகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. கடலூர் திமுக எம்.பி மீது அதிருப்தி நிலவுவதாலும், மயிலாடுதுறையில் பாமக கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெறும் என்பதாலும், தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க வேண்டாம் என்று கருதி அதையும் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE