நீலகிரி மக்களவைத் தொகுதியில் நான்காவது முறையாக ஆ.ராசா போட்டி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஆ.ராசா திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக நீலகிரி தொகுதியில் களம் காண்கிறார்.

ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் எஸ்.கே. ஆண்டிமுத்து மற்றும் கிருஷ்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். வழக்கறிஞரான அவர் தனது பட்டப்படிப்பை (பிஎஸ்ஸி -கணிதம்) முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், சட்டப்படிப்பை (எல்) மதுரை சட்டக்கல்லூரியிலும், முதுநிலை சட்டப் படிப்பை (எம்.எல்) திருச்சியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.

ஆராசா மனைவி பரமேஸ்வரி சமீபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு மயூரி ராஜா என்ற மகள் உள்ளார். அவர் தற்போது டெல்லியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

ஆ.ராசா முதன்முதலாக பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 11வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் 1999ல் நடைபெற்ற 13வது மக்களவைக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 1999 முதல் 2000ம் ஆண்டு வரை மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், அதன் பின்னர் 2003ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2004ம் ஆண்டு நடைபெற்ற 14வது மக்களவைக்கான தேர்தலிலும் திமுக சார்பில் பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 - 2007 ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், பின்னர் 2007ம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக 2009 வரை பொறுப்பு வகித்துள்ளார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைக்கான தேர்தலில் திமுக சார்பில் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜூன் 2009ல் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் எழுந்த 2ஜி விவகாரத்தில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ஆராசா இளம் வயது மத்திய அமைச்சர்களில் ஒருவராக விளங்கினார்.

இரண்டாம் முறையாக மீண்டும் நீலகிரி போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

பின்னர் மூன்றாவது முறையாக 2019ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் களம் காண்கிறார்.

தனது கல்லூரி காலங்களில் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளார். அப்போது பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடுக் கொண்டிருந்தார். முதன்முதலாக தனது பொது வாழ்க்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர், பின்னர் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கார் சிந்தனையாளர்கள் பேரவையின் தலைவராகவும், பெரம்பலூர் பகுத்தறிவாளர்கள் பேரவை மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் ஆ.ராசா பணியாற்றியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE