அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும், ஓபிஎஸ் - பாஜக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை: கு.ப.கிருஷ்ணன்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

ஓபிஎஸ் தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கடந்த மார்ச் 3-ம் தேதி உருவாக்கப்பட்டது. இதனிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணித்து வரும் முன்னாள் அமைச்சரும், மீட்புக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கு.ப.கிருஷ்ணன் சமீபகாலமாக ஓபிஎஸ் உடன் எங்கும் தென்படவில்லை. பாஜகவுடன், ஓபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதை விரும்பாமல், அவரிடமிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கு.ப.கிருஷ்ணன் கூறியது: அதிமுக சட்ட விதிமுறைகளின்படி சில உரிமைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை இபிஎஸ் 3 முறை முறித்துவிட்டார். அதை மீட்டுக்கொடுப்பது தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கடமை.

உரிமை மீட்புக்குழுவுக்கும், பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதற்கும் சம்பந்தமில்லை. பாரதப்போரில் அர்ஜூனன் இல்லாத வேளையில், அவன் மகன் அபிமன்யுவை துரியோதனன் பக்கத்தில் இருக்கக்கூடிய பெரியவர்கள் கொலை செய்தனர்.

அதுபோல அதிமுகவை பல்வேறு காலக்கட்டங்களில் பலர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அது உயிர்போகும் தருவாயில் இந்தத் தேர்தலில் நிற்கிறது. அது ஓபிஎஸ், இபிஎஸ் என யார் பக்கமாக இருந்தாலும் சரி. அதிமுகவை அழிப்பதற்கு பல தீயசக்திகள் ஒன்று கூடியிருக்கின்றன.

எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்துடன் கூட்டணி வைக்க திண்ணையிலும், வாசற்
படியிலும், தெருவிலும் பலர் நின்றது ஒரு காலம். வள்ளலார் சொன்னதை போல ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்ற நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக காத்திருக்கும் நிலையில் அதிமுக உள்ளது. இதற்கு தொண்டர்கள், தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாதது தான் காரணம்.

அதிமுகவை காக்கவும், மீட்கவும் ஒரு தலைவன் உருவாவது காலத்தின் கட்டாயம். அவரை காலம் அடையாளம் காட்டும். பிளவுபட்ட அதிமுகவை இணைப்பதே எங்களது கடமை. அதைத்தான் நான் தொடர்ந்து செய்து வருகிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE