பாமக முன்வைத்த கோரிக்கைகள்... பாஜக அளித்த ‘உத்தரவாதம்’ - டீல் என்ன?

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டங்களுக்குப் பின், கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், “பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறுகிறது” என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6.40-க்கு தைலாபுரம் தோட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வந்தனர்.

தனி அறையில் ஆலோசனை: பின்னர் தேர்தல் ஒப்பந்தத்தை எல்.முருகன், ராமதாஸிடம் வழங்கினார். அதைப் படித்து பார்த்த ராமதாஸ் சற்று முகத்தை சுருக்கினார். எந்த தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்ற பட்டியல் அதில் இடம்பெறவில்லை என்பதால் ராமதாஸின் முகம் சுருங்கியதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், ராமதாஸ், அன்புமணி, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தனி அறையில் ஆலோசனை நடத்தினர்.

அரைமணி நேர ஆலோசனைக்குப் பின் காலை 7.50-க்கு வெளியே வந்து, பாமக தரப்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - பாஜக தரப்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “10 ஆண்டு காலமாக பாமக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாமகவின் இந்த முடிவு, தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது. 2024-ல் மாபெரும் வெற்றி பெறுவதுடன், 2026-ல் அரசியல் மாற்றம் நடக்கும் என்றார்.

வடிவேல் ராவணன் எங்கே? - ‘பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறுகிறது’ என்பதை நேற்று முன்தினம் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாமக தலைமை வடிவேல் ராவணனிடம், “உங்களை யார் ஊடகங்களிடம் முதலில் பேச சொன்னது” என மென்மையாக கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர், நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பதவியா? - பாஜக - பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இடம்பெற்றிருந்தது. மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் குறித்து பேசிக் கொள்ளலாம் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர் என வடமாவட்ட தொகுதிகளை அதிகமாக ஒதுக்குமாறு கேட்டு பாஜகவிடம் பட்டியலை பாமக கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE