ஸ்டாலினை சந்தித்த இண்டியா கூட்டணி வேட்பாளர்கள்

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. இதையடுத்து, கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன், நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராஜ் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, வேட்பாளர்கள் இருவரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசனுடன் சென்று, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விசிக சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவரும், நேற்று ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச்செல்வன், எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதேபோல், மதிமுக சார்பில் திருச்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ, பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகளுடன் சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கொமதேக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரனுடன், நாமக்கல் தொகுதியின் வேட்பாளர் சூர்யமூர்த்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்புகளின்போது, ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE