மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகர திமுக சார்பில் நேற்று முன்தினம் நடந்த திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள், மேயர் பங்கேற்காததற்கு கோஷ்டிப்பூசல் காரணமா? என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சிப்பணியில் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டாலும் தேர்தல், கட்சி நிகழ்ச்சிகள் என வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையாக ஒரே அணியாக செயல்படுவார்கள். தேர்தல் பணிகளில் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுப்பார்கள்.

தற்போது மக்களவைத் தேர்தல் வந்துவிட்ட நிலையில் அதிமுக வேட்பாளரே அறிவிக்காத நிலையிலும் தங்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து, மதுரை மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து தேர்தல் களப் பணியாற்ற அதிமுகவினர் இறங்கி விட்டார்கள். ஆனால், திமுகவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக செயலாளர் தளபதி ஆகியோர் கட்சிப் பணிகளில் தொடங்கி தற்போது தேர்தல் பணிவரை ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்வதே இல்லை.

அமைச்சர்கள் பங்கேற்கவில்லை: நேற்று முன்தினம் மதுரை மாநகர் திமுக சார்பில் நடந்த மதுரை திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்கூட அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அழைப்பு வரவில்லையா? அல்லது மாநகர் திமுக சார்பில் அழைக்கவில்லையா? என்ற குழப்பம் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதல் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரை உள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்த அன்று மதுரையிலேயே இல்லை. இந்தக் கூட்டம், மாநகர திமுக சார்பில் நடந்ததால் அமைச்சர் பி.மூர்த்திக்கு அழைப்பு இல்லை. அதனால், அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தனியாக மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகள் சார்பில் 20 ( இன்று ) மற்றும் 21-ம் தேதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டங்களை நடத்த உள்ளார்.

ஆனாலும், மதுரை திமுகவை பொருத்தவரையில் உள்ளாட்சித் தேர்தல், மாநகர திமுக கட்சித் தேர்தல் முதலே 2 அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரையில் மு.க.அழகிரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அதன்பிறகு மதுரையில் திமுக போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

அவர்களை சமாதானம் செய்து தேர்தல் பணியில் இறக்க வேண்டிய அமைச்சர்கள், மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி, மேயர் இந்திராணி மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பிரிந்து கிடப்பதால் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களை தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பதில் சிரமம் அடைகின்றனர் எனக் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE