காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் 92-வது பிறந்த நாள்: சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் 92-வது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் 92-வது பிறந்த நாள் விழா தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் குமரிஅனந்தனுக்கு மலர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், ஹசன் மவுலானா,தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, தமிழ்நாடு பனைவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவுக்கு தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது, “தமிழக அரசியலில் நேர்மையின் அடையாளமாக திகழ்பவர் குமரி அனந்தன். பெருந்தலைவர் காமராஜரின் அன்பைப் பெற்றவர். சிறியவயதிலே கதர் ஆடை இயக்கம் நடத்தினார். நமது சொத்தான பனை மரத்தை பாதுகாப்பதற்கு இயக்கம் கண்டார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தார். அவர் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

நிறைவில் குமரி அனந்தன் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை என்ற தமிழன்தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன்முதலில் உச்சரித்தான். தனது 16 வயதில் ஜெர்மன் சென்ற அவர், இந்தியாவின் விடுதலைக்காக ஐஎன்ஏ என்ற இந்திய தேசிய தொண்டர்கள் படையை உருவாக்கினார்.

ஜெர்மனியில் இருந்து எம்.10 கப்பலை எடுத்து வந்து சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி பீரங்கி குண்டால் தாக்கினார். அந்த குண்டு உயர்நீதிமன்றத்தை நோக்கி சென்றது. அடுத்த குண்டுகோட்டை அருகே மண்ணில்விழுந்துவிட்டது. அதை மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கோட்டை மீது குண்டு வீசிய மாவீரன் செண்பகராமன் பெயரை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE