தேர்தலில் பாமகவுக்கு தர்மம் நல்ல பதில் தரும்: அதிமுக கருத்து

By செய்திப்பிரிவு

திருச்சி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி நவலூர்குட்டப்பட்டு பகுதியில் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளர்பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தின வேல், மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரை அண்ணாமலை இகழ்ந்து பேசிய போது கண்டிக்காதது ஏன்? பாமக கூட்டணி மாறியதற்கு தர்மம் நல்ல பதிலை தரும்.

பல நேரங்களில் அதிமுக தனியாக நின்று தனது சொந்த பலத்தை வைத்தே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக - திமுகவுக்கு தான் நேரடி போட்டி எனக் கூறும் அண்ணாமலைக்கு, தேர்தல் முடிவுகளுக்கு பின் யார் யாரோடு மோதி, யார் வீழ்கிறார்கள்? யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE