“திமுக ‘5ஜி’ குடும்ப ஆட்சி, இந்து தர்மத்துக்கு எதிராக இண்டியா!” - சேலத்தில் பிரதமர் மோடி சரமாரி தாக்கு

By செய்திப்பிரிவு

சேலம்: "திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது. தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர்" என்று சேலத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி காட்டமாக பேசினார்.

பிரதமர் மோடி கலந்துகொண்ட பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியது: "கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பாக நான் பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். சேலம் வருவதன் மூலம் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கும், எனக்கும் கிடைத்து வரும் மிகப் பெரிய மக்கள் ஆதரவை, இந்திய நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இது குறித்துதான் பேசப்படுகிறது.

கோயம்புத்தூரில் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தமிழகத்தில் மோடி ஆகிய எனக்கும் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கமே தொலைந்துப் போய்விட்டது. தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். இம்முறை ஏப்ரல் 19-ம் தேதியன்று விழுகிற ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் என்று மக்கள் உறுதியாக முடிவு செய்துவிட்டார்கள். தமிழகத்தின் இந்த உறுதியான முடிவால், மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் என்று முடிவு செய்திருப்பதால், நம் வெற்றியின் எண்ணிக்கை, 400-ஐ தாண்டும்.

வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகம், நவீன உள் கட்டமைப்புகளுக்கு வெற்றி எண்ணிக்கை 400-ஐ தாண்ட வேண்டும். மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை உருவாக்க, பாரதம் தன்னிறைவுப் பெற, விவசாயிகள் பயனடைய, மீனவர் பாதுகாப்புக்கு 400-ஐ தாண்ட வேண்டும். இம்முறை மீண்டும் 400 வேண்டும்.

நம்முடைய என்டிஏ கூட்டணி இப்போது மிக வலுவான கூட்டணியாக உருவாகி உள்ளது. என்டிஏ கூட்டணியில் பாமக இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸின் அனுபவம், அன்புமணி ராமதாஸின் ஆற்றல் மற்றும் அவர்களுடைய தொலைநோக்கைக் கொண்டு தமிழகத்தை இன்னும் மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஓர் உத்வேகம் கிடைத்திருக்கிறது. என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள பாமக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நான் வரவேற்கிறேன்.

நான் பலமுறை சேலத்துக்கு வந்திருக்கிறேன். இம்முறை நான் சேலத்துக்கு வரும்போது எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வருகிறது. 40-50 வருடங்களுக்கு முன்பு நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றபோது, என்னுடன் ஒரு பெரிய குழு வந்திருந்தனர். அதில் ஓர் இளைஞர் இருந்தார். அவர் இந்த ஊரைச் சேர்ந்த ரத்னவேல். எனக்கு இப்போது அவருடைய ஞாபகம் வருகிறது. அவர் என்னுடன் பயணித்தபோது, சேலத்தின் பெருமைகள் மற்றும் இவ்வூரின் மற்ற சிறப்புகளை என்னிடம் கூறிக்கொண்டே வந்தார். அதைக் கேட்ட பின்னர், சேலத்தின் மீது எனக்கு ஒரு மிகப் பெரிய ஈர்ப்பு உருவானது. அவர் இங்கு உணவகம் நடத்தி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது நம்முடன் இல்லை. ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார். சேலம் மண்ணில் கால் வைத்தவுடன் எனக்கு அவருடைய நினைவு வந்துகொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் நான் கே.என்.லட்சுமணனை நினைவுகூர்கிறேன். தமிழகத்தில் பாஜக காலூன்ற தொடக்கக் காலத்தில் பாடுபட்ட மிக முக்கியமான மனிதர். பல தடைகளை மீறி கட்சியை வளர்த்தவர். பல பள்ளிகளை நடத்தியவர். இதேபோல், சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவுகள் வருகின்றன. கட்சிக்காக தனது உயிரையே தியாகம் செய்து உழைத்த அந்த மாபெரும் மனிதரை நினைவுகூர்கிறேன். ரமேஷ் உயிரைக் கொடுத்து உழைத்தவர். கட்சிக்காக உழைத்தவரை கொலை செய்துவிட்டார்கள் சமூக விரோதிகள். அந்த நேர்மையாளரை இந்த மண்ணிலே நினைவுகூர்ந்து எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.

நாடு முழுவதும் தற்போது தேர்தல் பிரச்சாரம் வேகமாக தொடங்கிவிட்டது. ஆனால், தொடக்கத்திலேயே இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் திமுகவின் எண்ணம் என்னவென்பது தெளிவாக தெரிந்துவிட்டது. மும்பையில் சிவாஜி பார்க்கில் நடந்த அவர்களது முதல் பேரணியிலேயே சுயரூபம் தெரிந்துவிட்டது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நமக்கு எல்லாம் அதன் சக்தி என்னவென்று நமக்குத் தெரியும். அதை அழிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் என்ற ரீதியில் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர். இந்து மதத்தில் சக்தி என்பது என்ன என்பதை, தமிழக மக்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் மிக நன்றாகத் தெரியும்.

இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலின் வாசலில் ஓம் சக்தி என்று எழுதியிருக்கும். மாரியம்மனை இங்கு நாம் சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரியில் சக்தி வழிபாட்டுத் தலம், சமயபுரம் மாரியம்மன் என சக்தி மிக்க தெய்வங்கள் அனைத்தும் பெண் வடிவத்தில், தமிழகத்தில் வழிபடுகின்றனர். சக்தி என்பதற்கு மிகப் பெரிய அர்த்தம் இருக்கிறது. ஆனால், இந்த காங்கிரஸ் திமுக கூட்டணி இந்த சக்தியின் வடிவத்தை ஆன்மிகத்தை, சனாதனத்தை அழித்துவிடுவதாக கூறி வருகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்துக்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு கருத்தும் மிகவும் ஆழமாக யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இந்து மதத்தை தாக்கும் திமுக காங்கிரஸ் இண்டியா கூட்டணி பிற மதங்களைத் தாக்கி பேசுவது இல்லை. வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் அவர்கள் ஒரு சொல்கூட பேசுவது இல்லை. ஆனால், எப்போதெல்லாம் இந்து மதத்தை அவமதிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல், இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி நம்மால் சகித்துக் கொள்ள முடியும், அனுமதிக்க முடியும்?

தமிழகத்தின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கு, இண்டியாக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்ன? அந்த செங்கோல், இங்குள்ள சைவ ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. அவர்களுடைய ஆசி பெற்ற அந்த செங்கோலை, நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அதை அவமதித்தவர்கள் இண்டியா கூட்டணியினர். இந்து தர்மத்தின் வழிபாட்டுக்குரிய சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். இதை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோனதற்கான சான்றுகள் சாஸ்திரங்களில் உள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகத்தில் இருந்துதான், இந்த அழிவு அவர்களுக்கு தொடங்கப்போகிறது. முதல் கட்டமாக தமிழக மக்கள்தான் வாக்களிக்கப் போகிறார்கள். பெண் வடிவில் சக்தியை வழிபட்டவர் சுப்ரமணிய பாரதியார். பெண் வடிவில் நாட்டின் பாரத அன்னை என்று போற்றியவர். நாட்டின் பெண் சக்தியை அவர் வணங்கினார். நான் பாரதியாரின் வழியில் நானும் ஒரு சக்தி வழிபாட்டாளன். எனவே, சக்தியின் அடையாளத்தை யாரெல்லாம் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்களை வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம் மிக கடுமையாக தண்டிக்கும். இந்த உத்தரவாதத்தை தமிழகம் தருகிறது.

நம் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர்களை நான் ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்து பணி செய்து வருகிறேன். சமையலறை புகையால் கஷ்டப்பட்ட பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை பெறும் வகையில், உஜ்வாலா இலவச கேஸ் இணைப்புகளை வழங்கினோம். ஆயுஷ்மான் திட்டம் என அனைத்து திட்டங்களிலும் பெண்களின் நலனை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் இலவசமாக 3.65 கோடி பேருக்கு ரேஷன் கிடைக்கும்போது, என்னுடைய தமிழக தாய்மார்கள் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பார்கள். ஜல் ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் வீட்டைத் தேடி குடிநீர் வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள எனது தாய்மார்களும், சகோதரிகளும் நிம்மதியாக இருப்பார்கள். முத்ரா திட்டத்தில் பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. தமிழகம்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக முத்ரா திட்டத்தில் பெண்கள்தான் அதிகமாக கடன்பெற்று பயனடைகின்றனர்.

எந்த பெண் சக்திக்காக நாங்கள் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினோமோ அந்த பெண் சக்திதான் இன்று எனக்கே பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. பெண்கள்தான் பாஜகவின் பாதுகாப்புக் கவசம் போல, உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் அதிகளவில் மக்களைச் சென்றடையும், இது மோடியின் உத்தரவாதம்.

இண்டியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸும் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என்பதற்கு தமிழகம்தான் சாட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதுதான் அவர்களுடைய உண்மையான முகம். அதனால்தான், அவர்கள் இன்று நாங்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.

தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துபோய் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளே, வரும் ஏப்ரல் 19-ம் தேதி நீங்கள் வழங்கக்கூடிய தீர்ப்பு திமுகவுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான அவர்களது மனநிலையைக் கண்டிக்கும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது. தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர். அது என்னவென்றால், அவர்களது 5-வது தலைமுறை மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்து வருகின்றனர்.

தற்போது திமுக செய்து வருவது 5ஜி குடும்ப ஆட்சி மோசடி. இதற்கு முன்பு அவர்கள் செய்தது 2ஜி ஊழல் மோசடி. உலகம் முழுக்க இந்தியாவை தலைகுனியச் செய்தவர்கள் திமுகவினர். அவர்கள் செய்த ஊழலை எல்லாம் நான் பட்டியலிட்டால் இந்த ஒருநாள் போதாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடிகளை தமிழகத்துக்கு அனுப்புவதில் மிக ஆர்வமாக இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆனால், இங்கு இருக்கும் திமுக அரசு அந்த பணத்தில் எல்லாம் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலே குறியாக இருக்கிறது.

மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நான் நினைவுகூர்கிறேன். எத்தனைப் பெரிய தலைவர். அவர் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொடக் கூடியவராக இருந்தார். அவர் மட்டும் மனது வைத்திருந்தால், இந்தியாவின் பிரதமர் என்ற உயரத்தை அடைந்திருப்பார். ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி அவரை வளரவிட்டதா? அவருக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து அவரை வளர விடாமல் செய்ததுதான் காங்கிரஸ் கட்சியின் குணம்.

தமிழகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றால் அவரது முகம்தான் நினைவுக்கு வரும். அவர் உருவாக்கிய மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் ஒரு மிகப்பெரிய திட்டம். ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக உணவு வழங்க அவர் ஆரம்பித்த திட்டம் என்னை மிகப் பெரிய அளவில் கவர்ந்த திட்டம்.

பாஜகவும் என்டிஏ கூட்டணியும் பல பெரிய பெரிய கனவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது. என்டிஏ மிகப்பெரிய இலக்குகளை கொண்டிருக்கிறது. பல இலக்குகளை நாம் அடைந்துகொண்டு இருக்கிறோம். இன்று இந்தியாவில், நவீன உள்கட்டமைப்புகளின் மூலம் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம். ஆயிரக்கணக்கான கி.மீட்டருக்கு நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை உருவாக்கியிருக்கிறோம். 20-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. டஜன் கணக்கில் மருத்துவக் கல்லூரிகள், தொழில்துறை தன்னம்பிக்கையான பாரதத்தை உருவாக்கும் முன்னெடுப்புடன் முன்னோக்கிச் செல்கிறது. இந்த அனைத்து வளர்ச்சியும் தமிழகத்தைச் சேர்த்து முன்னுக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

என்டிஏ அரசு நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. பாஜக அரசு நாடு முழுவதும் உயர்தரமான 7 ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கி வருகிறது. அதில் தமிழகத்தில் ஒரு ஜவுளிப் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. சிறப்பான எஃகு இரும்பு தயாரிப்பு தொடர்பாக 6000 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. மத்திய அரசு அந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம் சேலத்தின் உருக்காலை தொழில் பெரிதும் பயன்பெற உள்ளது. ரயில்வே உள்கட்டமைப்புக்காக சேலத்துக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதிக்கு வந்தே பாரத் ரயிலும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கும் ஒவ்வொரு தலைவர்களையும் நான் வணங்கி வரவேற்கிறேன். ஒரு உறுதியான தமிழகத்தை, வலிமையான பாரதத்தை உருவாக்குவதற்காக சபதம் எடுத்துக்கொண்டு, வேறு எதுபற்றியும் கவலைப்படாமல் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வந்திருக்கும் ஒவ்வொரு தலைவரையும் நான் இதயப்பூர்வமாக இந்த கூட்டணிக்கு வரவேற்கிறேன். உங்கள் ஒவ்வொருவரது உழைப்பால், நம்முடைய நாடு வலிமையான பாரதமாக உருவாகும். வளர்ச்சியடைந்த பாரதமாக உருவாகும். புதிய உயரங்களைத் தொடுவதற்கான உத்வேகம் உங்கள் ஒவ்வொருவரின் வருகையால் கிடைக்கும் என்பதற்காக மேடையில் உள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிற காலம் அது. எனவே, அதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழக மக்கள், ஒரு புதிய சாதனையைத் தொடங்கி வைக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பாஜக வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். உலகின் பழமையான மொழியான தமிழ் நம்மிடம் இருக்கிறது. அதன் அருமை நமக்கு தெரியவில்லை.

எனது நாட்டின் தமிழ் மொழி உலகத்தில் தொன்மையான மொழி என்று நான் உலகம் முழுவதும் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறேன். தமிழ் மொழியை அதன் பெருமையை உணர்ந்தும்கூட உங்களிடம் தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. ஒருவேளை ஒரு நான்கைந்து மாதங்கள் சேலத்தில் வந்து உங்களுடன் இருந்தால், எனக்கு இந்தப் பேச்சு வந்துவிடலாம். ஆனால், அதற்கு வழி இல்லாததால், நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேச முயற்சித்துள்ளேன்.

நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் தளத்தில், இனிமேல் நான் உங்களுடன் தமிழில் பேச ப்போகிறேன். நீங்கள் கேட்பதோடு மட்டுமின்றி, உங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தும் எனக்கு முக்கியமானது. எனது மொழியை நான் செம்மைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறினால், நான் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். அப்போதுதான் நமக்குள் ஒரு கலந்துரையாடல் முழுமையாக நடக்கும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்