திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு: மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கும் நிலையில், முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது. இதுதவிர, நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ராமநாதபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம், விசிகவுக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகள் சமீபத்தில் ஒதுக் கப்பட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிதலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் நேற்று பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தனர். 12.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், அவரை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வந்தனர். அடுத்த சில நிமிடங்களில் தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.

இதன்படி, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், முதல்வர் ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கடந்த முறை போட்டியிட்ட ஆரணி, திருச்சி, தேனிக்கு பதிலாக தற்போது காங்கிரஸுக்கு திருநெல்வேலி, கடலூர், மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2, 3 நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறினார்.

தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் உள்ளிட்டோர் அறிவாலயம் வந்தனர். மதிமுகவுக்கு திருச்சிதொகுதி ஒதுக்கப்பட்டு உடன்படிக்கையில் முதல்வர் ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர்.

மதிமுக கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. தற்போது அங்கு திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதிலாக, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு திமுக பெற்றுத் தந்துள்ளது. காங்கிரஸ், மதிமுகவுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

திமுக (21) - வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, தென்காசி (தனி), தூத்துக்குடி, தேனி.

காங்கிரஸ் (10) - திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) - மதுரை, திண்டுக்கல்.

இந்திய கம்யூனிஸ்ட் (2) - நாகை (தனி), திருப்பூர்.

விசிக (2) - சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி).

மதிமுக (1) - திருச்சி

ஐயுஎம்எல் (1) - ராமநாதபுரம்

கொமதேக (1) - நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அறிவித்தார். அதன்படி திருப்பூரில் கே.சுப்பராயன், நாகையில் வை.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ, நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் தற்போதைய எம்.பி.யான சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்