“தேர்தல் ஆணையம் மூலம் குறைவான கால அவகாசம் கொடுத்து நெருக்கடி” - கே.பாலகிருஷ்ணன் காட்டம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: "தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமருக்கு தெரியும். அது தெரிந்துதான் தேர்தல் ஆணையம் மூலம் குறைந்த கால அவகாசம் கொடுத்து நெருக்கடியை கொடுத்துள்ளனர். எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரையில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எம்எல்ஏவாக தொடரும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் பரிந்துரை கடிதம் அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக ஆளுநருக்கும் உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்க முடியாது என மத்திய பாஜக அரசின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாகமாகவும், எதிராகவும் செயல்படுகிறார்.

திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தொகுதிப் பங்கீடுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். அப்படித் தெரிந்ததால்தான் தேர்தல் அறிவிப்பதற்கு 3 மாதத்துக்கு முன்பே பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவிட்டார்.

வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது. பாஜக கூட்டணிக்கு யார் யாரையோ அழைத்துப் பார்த்தார்கள். யாரும் வராததால் தற்போது பாமகவை சேர்த்துள்ளனர். பாஜக கொள்கைகள் இல்லாத கட்சி. மோடி என்ற ஒரு முகத்தை முன்னிலைப்படுத்தும் கட்சி. அவர்களது கூட்டணியிலிருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். மதுரை தொகுதியில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE