“பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்” - தினகரன்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: “இஸ்லாமியர்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மேலும், “தமிழகத்தில் வெற்றி பெற்றுதான் பிரதமராக வேண்டிய அவசியமில்லை” என்று மோடியின் செல்வாக்கு குறித்து அவர் குறிப்பிட்டார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 19) கூறியது: ''ஒரு சில தனி நபரின் சுயநலம், பதவி வெறி, பணத் திமிர், துரோகம் ஆகிய காரணங்களால் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கம், 30 ஆண்டுகளாக ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கமான அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. இரட்டை இலை என்னும் மாபெரும் மக்கள் சின்னம் இருந்தும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே, 2019-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

பண பலம், ஆட்சி அதிகாரம் இருந்தும் தோல்வியை சந்தித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த ஆட்சியை இழந்துவிட்டனர். ஊழல், முறைகேடு, சுய நல நிர்வாகத்தால் ஆட்சி பொறுப்பில் இருந்து மக்கள் அகற்றிவிட்டனர். பழனிசாமி செய்த தவறுக்கு மக்கள் தண்டனையை கொடுப்பார்கள். எங்களுடன் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள்.

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், சின்னம், புத்துயிர் பெறும். ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம் வளர்ச்சி பெறும். அதிமுக இயக்கத்தை உண்மையான தொண்டர்களின் கையில் ஒப்படைக்கவே நானும் பன்னீர்செல்வமும் இணைந்துள்ளோம். பழனிசாமியுடன் உள்ள 90 சதவீதம் பேருக்கு பதவி பெறுவதற்கு உதவி செய்தது நான். எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்துள்ளேன். முதல்வர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்தவர் பன்னீர்செல்வம். அவரும், நானும் பதவிக்காக அலையவில்லை. பதவி தேடி வர வேண்டும்.

அதிமுக இயக்கத்தை மீட்க, நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம். தமிழகத்தின் எதிர்கால அரசியலில் துரோகம் என்ற வார்த்தையை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படும் அளவுக்கு பழனிசாமியின் வீழ்ச்சி இருக்க வேண்டும்.

திமுக கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லொனா துயரத்தில் உள்ளனர். போதை கலாச்சாரம் புழக்கம் மூலைமுடுக்கெல்லாம் பரவி மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு கூட பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

ஆளுங்கட்சி துணையுடன் போதை கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளதாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி வருத்தத்துடன் பேசியுள்ளார். அரசியலுக்காக அவர் பேசவில்லை. தமிழகத்தில் வெற்றி பெற்றுதான் பிரதமராக வேண்டிய அவசியமில்லை. பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். 360 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பாஜக அடைந்துவிடும். ஊழல் இல்லாத ஆட்சி, வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நிர்வாகம், இந்தியாவின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 10 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளனர். இதனால் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களை பாஜக திணிக்கவில்லை. மக்களின் மனநிலையை உணர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை கொடுத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை தாங்கள் கொடுத்ததாக திமுக கூறுகிறது. தமிழகத்துக்கு 10 ஆண்டுகளாக, பாஜக அரசு கொடுத்த திட்டங்களை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் என்பதற்காக அருமையான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. இந்த நல்லெண்ணத்தில்தான் கூட்டணியில் இணைந்துள்ளோம். நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளோம்.

தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் வீழ்த்தி பிரதமர் மோடிக்கு கவுரவமான எண்ணிக்கையில் உறுப்பினர்களை தமிழக மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அணிலை போல அமமுக செயலாற்றும். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளை பெற்றதாக, அப்போதுள்ள யதார்த்தத்தை கூறினேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் பாஜக என்ற திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும். தொண்டர்களின் விருப்பப்படியே அமமுக கூட்டணி அமைத்துள்ளது.

திமுக, பழனிசாமியை வீழ்த்துவதற்கு அரசியல் யுக்தியாக கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணிக்காக நிர்பந்திக்கவில்லை. பிற கட்சிகளுக்கு பெட்டிகளை கொடுத்து வாங்குவதுபோல் என்னை வாங்க முடியாது என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

யாருடைய குடியுரிமையும் பறிக்க, குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிப்பதுதான் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் நோக்கம். பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை விரட்டவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தவறு என கூறவில்லை. இஸ்லாமிய மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெறுவதற்காக திமுக வழக்கம்போல் பயமுறுத்தி வருகிறது'' என்றார் தினகரன். முன்னதாக அவர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்