புதுச்சேரி மக்களவை தொகுதியில் தமிழிசை போட்டி? - ஆளுநர் பதவி ராஜினாமா பின்னணி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதுச்சேரியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இச்சூழலில் வெளி மாநிலத்தவர் பிரச்சினையை கிளப்ப உள்ளூர் சமூக அமைப்புகள் தயாராகின்றன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கடந்த 2006, 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார். பின்னர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோற்றார். தொடர்ந்து 2019-ல் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றார். அதையடுத்து 2021-ல் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி உட்பட தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் அவர் போட்டியிட திட்டமிட்டார். முக்கியமாக புதுச்சேரியில் போட்டியிடுவது தொடர்பாகவும் பல தகவல்கள் பரவியதற்கு நேரடியாக அவர் பதில் தராமல் இருந்து வந்தார். விரைவில் தெரிவிப்பதாகவும் சூசகமாகத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை போட்டியிட காய்களை நகர்த்திய போது பாஜக தரப்பிலும் விவாதம் கிளம்பியது. ஒருகட்டத்தில் ஆளுநர் தமிழிசை சட்டப்பேரவை கோப்புகளை பல மாதங்கள் நிலுவையில் வைத்ததாக பேரவைத்தலைவர் செல்வம் குற்றஞ்சாட்ட அது சர்ச்சையானது. இச்சூழலில் புதுச்சேரியில் சிறுமி பாலியல் கொடுமையான சம்பவத்துக்கு அரசு தரப்பிலோ, பாஜக தரப்பிலோ சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லாத நிலையில் ஆளுநர் தமிழிசை நேரடியாக சென்று பலரின் எதிர்ப்புக்கு இடையில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு சில நாட்களுக்குப் பிறகே பாஜக தரப்பினர் சிறுமி வீட்டுக்குச் சென்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இத்தொகுதியில் மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. வேட்பாளரை தேர்வு செய்து தலைமை அறிவிக்கவில்லை. தொடர்ந்து தமிழிசை போட்டியிட முயற்சித்து வந்தார். அதேபோல் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மற்றும் சிலரும் வேட்பாளர் பட்டியலில் இருந்தனர்.

இச்சூழலில் சமூக நீதி பேரவைத்தலைவரான முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் சமூக அமைப்பினர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹரிடம் மனு தந்தனர். அதுதொடர்பாக கூறுகையில், “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் யார், யார் நிற்க வேண்டும் என்ற பிரஞ்சு இந்திய ஒப்பந்தத்தின் நகல் கொடுக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் புதுச்சேரி விடுதலை அடைவதற்கு முன்னால் குறிப்பாக 1962ம் ஆண்டுக்கு முன்னதாக புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற ஷரத்தை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஏற்கனவே புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம் போட்டியிட்டு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது புதுச்சேரியில் ஆளுநராக இருந்த தமிழிசை போட்டியிட இயலுமா என்பது மனு அடிப்படையில் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

தெலங்கானாவில் உள்ள தமிழிசையிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், "நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவேன்.எந்த தொகுதி என்று கட்சி மேலிடம் அறிவிக்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE