தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-வுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இபிஎஸ் இன்று (திங்கள் கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்பதுபோல், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொன்னால், நானே முதல்வன் - நான் ஆளும் மாநிலமே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் புலம்பி வருகிறார்.

சிறந்த ஆட்சியாளர்கள் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும். மக்களின் விதிப் பயனால் நமக்கு கிடைத்துள்ள முதல்வர் போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியில் நியமித்த அயலக அணி நிர்வாகிதான் வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி இருக்கிறார் என்ற உண்மையை மறைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறார்கள்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத முதலமைச்சர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்துவிடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் போதைப் பொருள் புழக்கமோ, கடத்தலோ, விற்பனையோ இந்த விடியா திமுக அரசின் காவல்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதான் அந்தப் பணியைச் செய்து வருகிறது. விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்ததோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

100 கிராம், 200 கிராம் என்ற அளவில் போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 29 நாட்களில் 402 பேர் கைது என்று செய்திக் குறிப்பை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு முன்புவரை இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? மேலும், இதுபோன்ற சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் முதல்வர், மனித சங்கிலிப் போராட்டம் ஒரு நாடகம் என்று சொன்னதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப் பொருட்கள், திமுக நிர்வாகி கைது மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் பேட்டி போன்றவை நடைபெறவில்லை என்று முதல்வர் நினைக்கிறாரா? மேலும், போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த விடியா திமுக அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-வுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்