ஆர்கானிக் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய அவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாய விளைபொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்றாற்போல் ஆர்கானிக் பொருட்களை விற்கும் கடைகளும் நகர் பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், ஆர்கானிக் உணவுப் பொருட்களின் உண்மைத் தன்மையை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வரைவு விதிகளைக் கடந்த ஆண்டு வெளியிட்டது.
இதுகுறித்து பொது மக்கள் கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி வரை தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தர (ஆர்கானிக் உணவுகள்) விதிமுறைகள் 2017 மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் குறித்து கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர். கிருஷ்ணன் கூறும்போது, “நேஷனல் புரோகிராம் ஃபார் ஆர்கானிக் புரோடெக்ஷன் (என்பிஓபி) மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனம் (அப்பிடா) ஆகியவை ஆர்கானிக் உணவுகளைத் தற்போது முறைப்படுத்தி சான்று அளித்து வருகின்றன.
இருப்பினும், சில இடங்களில் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளைக்கூட இயற்கையானது என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, இயற்கையாக விளைந்த உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளை உருவாக்கி யுள்ளது.
அந்த விதிமுறைகளின்படி பொருள் எந்த வகையில் இயற்கையானது என்பது குறித்த விவரங்கள் லேபிளில் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும், உணவு பொருளின் மீது எஞ்சியுள்ள பூச்சிக்கொல்லியின் அளவு அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். சந்தைப்படுத்தும்போது ஆர்கானிக் உணவு பொருட்களை மற்ற பொருட்களில் இருந்து தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும்.
முறைப்படி ஆர்கானிக் முத்திரை (லோகோ) பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறை களின்படி ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டுமே சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
இதில், நேரடியாக விவசாயிகளிடமிருந்து நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்கானிக் விளைபொருள் என்று கூறி செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறையும்” என்றார்.
இயற்கை வேளாண் ஆர்வலர் அனந்து கூறும்போது, “தற்போது சந்தையில் 99 சதவீத உணவு பொருட்கள் நச்சுத் தன்மையுடன்தான் கிடைக்கின்றன. சுமார் 1 சதவீதம் மட்டுமே இயற்கை வேளாண் விளைபொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால், நச்சுத்தன்மையுள்ள காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களைக் கட்டுப்படுத்த இதுவரை முறையான எந்த கண்காணிப்பும் இல்லை. இந்நிலையில், ஆர்கானிக் உணவுப் பொருட்களின் தரத்துக்கான விதிமுறைகளை அரசு வகுத்து வெளியிட்டுள்ளது.
சிறு விவசாயிகளுக்கு விதிவிலக்கு
நேரடியாக நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்யும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த கடைக்கு கொடுத்தாலும் புதிய விதிமுறைகளின்படி சான்று பெற வேண்டும். இந்த விதிமுறைகள் சிறு விவசாயிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தும்.
இயற்கை விவசாயம் என்பது தற்போது வளர்ந்து வருவதால் சிறு விவசாயிகள், வியாபாரி களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று இயற்கை வேளாண் ஆர்வலர்கள் கூறிய கருத்துகள் அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளில் இடம்பெறவில்லை. எனவே, சிறு விவசாயிகள், வியாபாரிகளுக்கு சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோன்று, சான்று அளிக்கும் முறை எளிமையாக இருக்க வேண்டும்.
ஆய்வகங்கள் தேவை
கண்காணிப்பு என்பது தேவையான ஒன்றுதான். அதுவேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கண்காணிப்பு, மக்களுக்கு நம்பகத்தன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு இயற்கை வேளாண் பொருள் எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதோடு, பொருளின் தரத்தை வாடிக்கையாளரே அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆய்வக வசதியை ஏற் படுத்த வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago