போலீஸார் நடத்திய வாகன சோதனையில் சென்னையில் கணக்கில் வராத ரூ.1.53 கோடி ரொக்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து சென்னையில் போலீஸார் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.1.53 கோடிரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஜூன் 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தைவிதிகளும் உடனடியாக அமலுக்குவந்துள்ளன. எனவே, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் போலீஸார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்தவகையில், சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 16 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்வார்கள். அதன்படி, நேற்று முன்தினம் மாலை முதலே போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை யானைக்கவுனி மின்ட் தெருவில் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் வந்த ஒருவரை போலீஸார் பார்த்து பின் தொடர்ந்து, சென்றனர்.

பின்னர், அந்த நபர் சவுகார்பேட்டை துளசிலிங்கம் தெருவில், நின்று கொண்டிருந்த 2 பேரிடம் அந்த பையை கொடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது, போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பையை சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பணத்தை கொடுக்க வந்தவர் அராபத்(47) என்பதும், பணத்தை வாங்க வந்தவர் குணால் ஜெயின்(32), தர்ஷன்(22) என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் வைத்திருந்த ரூ.1 கோடியே 42 லட்சத்து 49,500-ஐபறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும்,இதுதொடர்பாக போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சவுகார்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியான ஆட்டோவை மடக்கிசோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.10.5லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சுஜன் ராம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல்நாளே இப்படி கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE