‘இண்டியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்’ - கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: இண்டியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.ஏ.சித்திக் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதால், எதிர்க்கட்சியினர் பயப்படுவதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும், தமிழகத்தின் கலாச்சாரத்தை அறிந்து, தமிழக உணவுகளை அருந்த வேண்டும், இதைக்கண்டு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

நாங்கள் அவரது வருகையை பாராட்டுகிறோம். எங்களுக்கு தேர்தல் பயம் இல்லை. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இண்டியா கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை எங்களால் கூற முடியும். ஆனால், தமிழகத்தில் பாஜக கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என அவர்களால் சொல்ல முடியுமா.

லெட்டர் பேடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் பாஜக ஒரே கட்டமாக இந்தியா முழுவதும் ஒரே தேதியில் தேர்தலை நடத்த வேண்டும். அற்கான போலீஸ், துணை ராணுவம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நமது நாட்டில் உள்ளன. பிரதமரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காகவே இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர்.

போதைப்பொருள் என்பது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை, இதனை மாநில பிரச்சினையாக்கி ஒரு கட்சி மீது பழி போடுவது தவறு. குஜராத் மாநிலம் பந்த்ரா துறைமுகத்தின் வழியாக அதிக அளவு போதை பொருள் வருகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

இதை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க, போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, நாடு முழுவதும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.

இந்தி, இந்துத்துவா திணிப்பு இல்லாத மதச்சார்பற்ற, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு அளிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், நான் அங்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பேன். வேட்பாளர்கள் யார் என்பதை மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE