சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி பெற்ற திமுக: இபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதனை விமர்சிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் எம்ஜிஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் மக்களவை தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE