விருதுநகர் | வேட்பாளரை அறிவிக்காமலேயே பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக: போலீஸார் அனுமதி மறுப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: கூட்டணி முடிவாகாமலும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதல் நாள் இரவில் விருதுநகரில் திடீரென பிரச்சாரத்தைத் தொடங்கியது பாஜக.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதில் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், கூட்டணிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படுகிறதா அல்லது பாஜக நேரடியாக போட்டியிடுகிறதா என்பதும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, விருதுநகர் தொகுதியில் முதல் ஆளாக நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பிரச்சாரத்தைத் தொடங்கியது பாஜக. விருதுநகரில் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா அருகே உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் பாஜகவினர் நேற்று கூடினர்.

அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் பூஜைசெய்து, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினர். தகவலறிந்து வந்த போலீஸார், பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி பெறாததால் மறுப்புத் தெரிவித்தனர். அதைடுத்து, அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பாஜக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து தங்களுக்குள்ளேயே தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

இதுகுறித்து பாஜகவினர் சிலரிடம் கேட்டபோது, ஞாயிற்றுக்கிழமை (இன்று) அஷ்டமி என்பதால் சனிக்கிழமையே விநாயகரை வணங்கி பிரச்சாரத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தனர். ஆனாலும், ராகுகாலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கியதாக பாஜகவினர் சிலரும் புலம்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE