“சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைப்பதில் காலதாமதம் தான் ஆகும்” - வேல்முருகன் 

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசுவதால் தான் பெரும்பான்மையான கட்சிகளுக்கு கூட்டணி அமையவில்லை என கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகம் பாஜகவிற்கு எதிராக உள்ள காரணத்தினால் தான் எவ்வித கால அவகாசமும் தராமல் ஒரு மாதத்திற்குள் தேர்தலை நடத்தும் அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது பாரதத்தை ஆட்சி செய்யும் பாஜகவின் மோசமான செயல். புதியதாக 2 தேர்தல் ஆணையாளர்களை நியமனம் செய்த மறுநாளே தேர்தலை அறிவிக்கின்றனர். எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர், எத்தனை வாக்குச்சாவடி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான எந்தவித வாய்ப்பு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆணையர்களுக்கு இல்லை.

பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என கூறிய கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை. பாஜக அரசு கொஞ்சம் கொஞ்சமாக நீதித்துறை, தேர்தல் ஆணையம், ராணுவம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் தன்னகத்திற்குள் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாஜக அரசின் அழுத்தம் காரணமாக தான் தமிழகத்தில் 30 நாட்களுக்குள் தேர்தலை நடத்துகிறது. பாஜக வெற்றி பெறக்கூடிய பகுதிகளில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஏழை மக்களின் கல்வி முன்னேற்றம்: பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலமாக பல்வேறு நிறுவனங்களில் ரெய்டு நடத்தி அந்த நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேர்தல் நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய கடுமையான உத்தரவின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வழங்கி உள்ளது.

அதில் அதிகாரப்பூர்வமாக 6000 கோடி தேர்தல் நிதியாக பாஜக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 2018 மற்றும் 19ஆம் ஆண்டுகளுக்கான ஆவணங்கள் இல்லை என எஸ்பிஐ வங்கி மறுக்கிறது அதனையும் கணக்கிட்டு பார்க்கும் போது, ரூ.11 ஆயிரம் கோடி வரை வரும் என தெரிகிறது. இந்த தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை இந்திய அரசின் கஜானாவில் சேர்க்க வேண்டும். இந்த பணம் ஏழை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக செலவிடப்பட வேண்டும்.

திமுகவிற்கு ஆதரவு: கூட்டணி குறித்து திமுகவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தொடர்ந்து முதல்வர் அழைத்து பேசுவார் என தெரிவித்துள்ளார்கள். முதல்வர் என்னை அழைத்து என்ன சொல்வார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் சமூக மக்களின் வாழ்வுரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாங்கள், அந்த அடிப்படையில் எங்களுக்கு இடம் வழங்கவில்லை என்றாலும் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு கல்வி வேலைவாய்ப்பில் உரிமையை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளேன். இந்த தேர்தலில் சீட்டுக்காக எந்த பேரமும் பேசப்படவில்லை.

சிஏஏ சட்டத்தை அண்ணாமலைக்கு படிக்க தெரியாமல் இருக்கலாம். இந்த சட்டத்தை இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் அந்நியப்படுத்தும் வகையில் இருப்பதால் இதனை நாங்கள் எதிர்க்கிறோம். சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற வாதத்தை என்னுடன் எடுத்து வைத்து வாதிட அண்ணாமலை தயாரா. மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேர்தலில் சீட்டுக்கான உடன்படிக்கை என்றால் சுலபமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையான கட்சிகள் நோட்டுக்கு பேரம் பேசுகின்றன. சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைப்பதில் காலதாமதம் தான் ஆகும்'' என பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE