விபரீத சாகசம் செய்து இன்ஸ்டா வீடியோ: சாத்தான்குளத்தில் 2 இளைஞர்கள் கைது

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதில் குதித்து விபரீத சாகச வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் பல்வேறு சாகசங்களை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகேயுள்ள வைரவன் தருவை குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விபரீத சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். குளத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். தீ மளமளவென எரியும் போது அதில் ரஞ்சித் பாலா குதித்து சாகசம் செய்துள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து ரஞ்சித் பாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி மேற்பார்வையில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) ஏசுராஜசேகரன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார் (19) மற்றும் வீரபுத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகியோர் சேர்ந்து இந்த சாகசத்தை செய்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

இதைடுத்து தட்டார்மடம் போலீஸார் 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணன் (எ) ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.

எஸ்பி எச்சரிக்கை: இதுபோன்று தேவையில்லாமல் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகள், புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மற்றும் வாகனங்களில் வீலிங் செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE