இருடியம் கடத்தல் விவகாரம்: நாராயணசாமியிடம் மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த அதிமுக வலியுறுத்தல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: இருடியம் கடத்தப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவரிடம் மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இருடியம் தொடர்ந்து கடத்தப்படுவதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் விடும்போது அங்கு நேரில் செல்லும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படும் இணை அமைச்சராக இருந்தவர். இருடியம் என்பது உலகளவில் ராக்கெட் சம்பந்தமாக பயன்படுத்தும் ஒரு பொருளாக அறியப்படுகிறது.

ராக்கெட் தயாரிப்பில் மிக மிக முக்கிய அவசியமான பொருளாக இருக்க கூடிய இந்த இருடியம் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் இருடியம் என்றால் என்ன? இருடியம் என்ற பொருள் புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படுகிறதா? அல்லது போலி இருடியம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்ற கேள்விகளை எழுப்புகிறது.

நாராயணசாமியின் குற்றச்சாட்டில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு முதலில் நாராயணசாமியிடமே நேரடி விசாரணை நடத்த வேண்டும். மத்திய நிதி துறை, சிபிஐ, இந்திய பாதுகாப்பு அமைச்சகம், அமலாக்கத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாராயணசாமியிடம் விசாரிக்க வேண்டும்.

இருடியம் திருடி விற்பது தொடர்பான தகவல்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி சிபிஐ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த தகவல்களை பத்திரிகை வாயிலாக பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நாராயணசாமிக்கு உள்ளது.

நாட்டின் நலன் கருதி அவருக்கு தெரிந்த உண்மையை தெரிவிக்க வேண்டும். இருடியம் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அதிமுக சார்பில் ஓரிரு தினங்களில் கடிதம் அனுப்பப்படும்.

பேருந்து நிலையம் விரிவாக்கம் சம்பந்தமாக பேருந்துகளை ஏஎப்டி மைதானத்தில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசு அறிவித்துள்ளது. இப்போது நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் முக்கிய கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டம் பிரச்சாரம் நடத்துவதற்கு நகரப் பகுதியில் இந்த ஒரு இடம் தான் காலியாக உள்ளது.

ஏற்கனவே உள்ள அண்ணா திடலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே மக்களவை தேர்தலுக்குப் பிறகு பேருந்துகளை ஏஎப்டி மைதானத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு மறு உத்தரவு வெளியிட வேண்டும்.” எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE