உசிலம்பட்டி அருகே சர்ச்சைக்குரிய நிலத்தில் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்ட தடை: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த பிரேம்சந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

உத்தப்பநாயக்கனூர் அய்யன்கோவில்பட்டியில் என் தந்தை ராஜனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமைதொடர்பாக என் தந்தை ராஜனுக்கும், அவரது சகோதரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளருமான தா.பாண்டியனுக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

உரிமையியல் வழக்கு: என் தந்தை ராஜன் 2011-ல் உயிரிழந்தார். இதையடுத்து நான்,சகோதரர்கள், தாயார் ஆகியோர் மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2021 பிப். 26-ம் தேதி தா.பாண்டியன் உயிரிழந்தார்.

இந்நிலையில், 2024 பிப். 26-ம்தேதி எங்கள் நிலத்துக்குள் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து, தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்ட உள்ளதாகக் கூறி, சில கற்களை வைத்து, கட்சிக் கொடியை ஏற்றிச் சென்றனர்.

சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் முடிவுக்கு வராத நிலையில், சொத்தில் யாரும் உரிமை கோர முடியாது. மேலும் விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்யாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. எனவே, தா.பாண்டியன் மணிமண்டபம் கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, சம்பந்தப்பட்ட நிலத்தில் மணிமண்டபம் கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE