வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை எனக் கூறி காங்கிரஸார் வடை சுடும் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழ்நாடு மாணவர் காங்கிரஸார் சென்னையில் நேற்று வடை சுடும் போராட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் மா.சின்னதம்பி தலைமையில் சென்னை அண்ணா சாலை, தாராபூர் டவர் அருகில் வடை சுடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், பிரதமர் நேரந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை குறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் வடை சுட்டு, பின்னர் கண்டன உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உத்திரவாதம் அளித்தார். 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்று கூறி, கடுமையாக உயர்த்தினார். மக்களிடம் அளித்த எந்த வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. மோடி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு வேலை கிடைக்காவிட்டால் பக்கோடா போட்டு பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடியை கண்டித்து, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மாணவர் காங்கிரஸ் சார்பில் வடை சுடும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE