“கல்வியை காவிமயம் ஆக்குவதே திராவிட மாடலா?” - பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மீது சீமான் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “பாஜகவின் புதிய கல்விக் கொள்கையான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி மாநிலக் கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா?” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகளை’ தமிழகத்தில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுப் பட்டியலிலுள்ள கல்வியை, மத்திய பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக் கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப் போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.

ஆனால், ஓராண்டுக்குள் தேசியக் கல்விக் கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதும், தமிழக அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமா மகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.

தற்போது அத்தனை சந்தேகங்களையும் உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் வர்ணாசிரம கல்விக் கொள்கையை முற்று முழுதாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகளை’ தொடங்கும் திமுக அரசின் முடிவு பாஜகவின் கைப்பாவையாகவே திமுக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக, மாநில அரசின் தன்னுரிமையைக் காவுகொடுத்து, பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா?

சனாதனத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்?. இதுதான் சமூகநீதி ஆட்சியா?. இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இந்துத்துவ பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே? இதுதான் ஆரியத்தைத் திராவிடம் வீரியமாக எதிர்க்கின்ற முறையா?.

மத்திய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, "குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து பொதுத் தேர்வை கொண்டு வரும் திட்டத்தைதான் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்பது வேறு, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் என்பது வேறு. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது" என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: தமிழகத்தில் ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்