தமிழகத்தில் ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி: "குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து பொதுத் தேர்வை கொண்டு வரும் திட்டத்தைதான் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்பது வேறு, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் என்பது வேறு. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது" என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 வருடம் செப்டம்பர் 5-ல் பிரதமர் மோடியால் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வரும் இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்துடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதன் பிறகு, பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளிகள் கொண்டு வரப்பட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மேம்படுத்தப்படும்.

டெல்லி, கேரளா, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க ஆகிய அரசுகளுடன் தமிழக அரசும் இந்தத் திட்டத்தை முதலில் ஏற்கவில்லை. தமிழகத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், அதன் கீழ் இயங்கும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தையும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துவந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 15), பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் தனது எக்ஸ் தள பதிவில் "பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். தமிழக அரசு மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இடையேயான இந்த கூட்டாண்மை, வலுவான மத்திய மாநில உறவுகளை குறிக்கிறது” என்று தெரிவித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையையும் வெளியிட்டது.

தொடர்ந்து தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரம், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது என்றும் தகவல்கள் பரவின. இதனையடுத்து இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். மாநில கல்விக் கொள்கையில் என்ன வருகிறதோ அதை சார்ந்து தான் ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்படும். மத்திய கல்வி அமைச்சகம் வழங்க வேண்டிய தவணை 1,138 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு பிஎம் ஸ்ரீ போன்ற திட்டங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. முதல்வரின் ஆலோசனையின்படி ஒரு கமிட்டி அமைத்து, அதன்மூலம் புரிந்துணர்வில் என்னென்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அது தமிழகத்துக்கு ஏற்றுக்கொள்ளுமா அல்லது முடியாதா என்பதை கலந்துபேசி மத்திய அரசிடம் தெரிவிக்கும் மனநிலையில் அதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து பொதுத்தேர்வை கொண்டு வரும் திட்டத்தை தான் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்பது வேறு, பிஎம் ஸ்ரீ திட்டம் என்பது வேறு. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது. மத்திய அமைச்சரிடம் நேரில் இதை சொல்லிவிட்டோம்.

கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். கல்வி மாணவச் செல்வங்களுக்கானது அதில் அரசியல் செய்யக்கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்