ஏப்.19-ல் விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்தின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கும் தொகுதி விளவங்கோடு. இத்தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. இவர் சமீபத்தில், பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

26 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு உட்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் விளவங்கோடு, கர்நாடகாவில் ஷோராப்பூர், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆறு தொகுதிகள், தெலங்கானா, திரிபுரா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி, மேற்குவங்கத்தில் இரண்டு தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 4 தொகுதிகள், குஜராத்தில் 5 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE