5 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் திருப்பூரின் 8 சட்டப்பேரவை தொகுதி மக்கள்!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல ஆயிரம் கோடி பின்னலாடை வர்த்தகத்தில் ஈடுபடும் திருப்பூர் மக்களவைத் தொகுதியை பலரும் குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் திருப்பூர் மக்களவை தொகுதியிலும், பல்லடம் தொகுதி கோவை மக்களவை தொகுதியிலும், காங்கயம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஈரோடு மக்களவை தொகுதியிலும், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி நீலகிரி மக்களவை தொகுதியிலும், மடத்துக்குளம், உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியிலும் வருகின்றன.

அதன்படி, திருப்பூர் மாவட்ட மக்கள் திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி, கோவை ஆகிய 5 மக்களவை தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். திருப்பூர் மக்களவை தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் 4 தொகுதிகளும் வருகின்றன.

2009-ம் ஆண்டு முதல் திருப்பூர் மக்களவை தொகுதியில் இதுவரை இரண்டு முறை அதிமுகவும், ஒரு முறை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுகவை சேர்ந்த சிவசாமி, சத்தியபாமா ஆகியோரும், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.சுப்பராயனும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. கே.சுப்பராயன் போட்டியிடுவதாக கட்சியினர் பரவலாக பேசி வருகின்றனர். அதிமுக சார்பில் பலரும் போட்டியிட முனைப்பு காட்டுகின்றனர். பாஜக சார்பிலும் கட்சிக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி, சின்னம் இன்றி தொகுதிக்குள் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “சிட்டிங் எம்.பி., போட்டியிட்டால் அது சாதகம் மற்றும் பாதகமான விஷயங்களை கொண்டதாகும். ஏற்கெனவே, திருப்பூர் தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகள், பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் முறையாக எதிரொலிக்கவில்லை என்ற கருத்துகளும் வலம் வருகின்றன.

பஞ்சு, நூல் விலை தொடங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்கள் வரை திருப்பூர் தொழில் நிலையை நாடாளுமன்றத்தில் பேசி, அதற்கான தீர்வுகளை தேடித் தரும் பிரதிநிதிகளை ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

அதேபோல் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 940 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் வரும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுபவர்கள், ஈரோடு மாவட்ட மக்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE