சென்னை: தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை கடந்த 6-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னையில் 'நீங்கள் நலமா?' திட்டத்தின் கீழ் வீடியோ கால் மூலம் மக்களை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்த சி.விஜய் ஆனந்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர் இத்திட்டத்தின் மூலம் பெற்ற நன்மைகள் குறித்து வினவினார். அப்போது, விஜய் ஆனந்த், அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தைப் பற்றி அறிந்து, அதன்மூலமாக மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கிட தொழில் கடன் பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், தொழில் கடன் வேண்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவுடன் உடனடியாக அது பரிசீலிக்கப்பட்டு, வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, எவ்வித தடங்கலுமின்றி விரைவாக 5 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதன்மூலம் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது நல்ல பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், சுய தொழில் தொடங்கியது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று முதல்வர் கேட்டபோது, இதுவரை தான் ஒருவருக்கு கீழ் பணியாற்றி வந்ததாகவும், தற்போது தொழில்முனைவோராகி 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவது மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது என விஜய் ஆனந்த் தெரிவித்தார்.
‘இந்த திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவித்திருக்கிறீர்களா?’ என்று முதல்வர் கேட்டபோது, தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களுக்கு இதுகுறித்து தெரிவித்திருப்பதாகவும், அவர்கள் அடுத்த மாதம் விண்ணப்பிக்க இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுவின் கீழ் பயன்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த பானுப்பிரியாவை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பானுப்பிரியா, தான் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும், மொத்தம் 20 பேர் அதில் உறுப்பினர்களாக உள்ளதாகவும் முதல்வரிடம் தெரிவித்தார்.
‘வங்கியிலிருந்து தங்களுக்கு எவ்வளவு கடன் கிடைத்தது, அதை வைத்து என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள்’ என்று முதல்வர் கேட்டபோது, பானுப்பிரியா, வங்கியிலிருந்து கிடைத்த கடன் தொகையை கொண்டு தனது அரிசி கடையை விரிவாக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.
சென்னை, வேப்பேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வரும் திருவண்ணாமலை மாவட்டம், வற்றாபுத்துர் கிராமத்தைச் சேர்ந்த எஸ். பிரியதர்ஷினியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பிரியதர்ஷினி, தான் வியாசர்பாடி-டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc. (Nutrution) பட்டப் படிப்பு படித்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேப்பேரி ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிவித்தார். இவ்விடுதியில் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
‘விடுதியில் ஏதாவது வசதிகள் தேவை இருந்தால் தெரிவிக்குமாறும், விடுதியை அதிகாரிகள் அடிக்கடி வந்து ஆய்வு செய்கிறார்களா?’ என்றும் கேட்ட முதல்வர் ஸ்டாலினிடம், விடுதியில் தேவையான எல்லா வசதிகளும் உள்ளது என்றும், மூன்று வேளையும் சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதாகவும், விடுதி பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருவதாகவும் அதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்” பயன்பெற்று வரும் அரியலூர் மாவட்டம், கோவிந்தபுதூரைச் சேர்ந்த ராதிகாவை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார
அப்போது ராதிகா, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பெற்று வருவதாகவும் அதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்வர், அவரது மகன் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ப்ரித்தாவை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவி ப்ரித்தா, தனக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து, அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதாகவும், தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago