சென்னை: கோவையில் மார்ச் 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு-ஷோ நிகழ்வுக்கு உரிய பாதுகாப்புடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, வரும் 18-ம் தேதி கோவை வருகிறார். அன்று மாலை 4 மணி அளவில் கோவை கவுண்டம்பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் 4 கி.மீ.தூரத்துக்கு காரில் இருந்தபடி பிரதமர் மோடி வாகனப் பேரணியாக (‘ரோடு ஷோ’) செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரமாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார் கடிதம் வழங்கியிருந்தார்.
ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் பிரதமரின் வாகனப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஆனால் அப்பகுதியில் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்களுக்கும், பொதுத்தேர்வை எதிர் கொண்டுவரும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், மேலும் மத ரீதியிலான பதற்றமான பகுதி என்பதால் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் எனக்கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையரும், ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையரும் பிரதமரின் இந்நிகழ்வுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
நாட்டின் பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வுக்கு இதுபோன்ற காரணங்களை சுட்டிக்காட்டி போலீஸார்அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே பிரதமர் பங்கேற்கும் ரோடு-ஷோ நிகழ்வுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரி யிருந்தார்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் ஆஜராகி, ‘‘கோவை வருகை தரும் பிரதமர், மாநகரில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உரிய அனுமதியின் பேரில் இதுபோன்ற நிகழ்வுகள் பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.
பிரதமரின் பாதுகாப்பு: காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘கோவையில் இதற்கு முன்பாக நிகழ்ந்த பல்வேறு அசம்பாவிதங்களைக் கருத்தில் கொண்டும், பிரதமரின் பாதுகாப்பு கருதியும், பொதுத்தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தி்ல் கொண்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. கோவையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எந்தவொரு கட்சிக்கும் அனுமதி வழங்கப்படுவதி்ல்லை’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நாட்டின் உயர்ந்தபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் பிரதமர், கோவையில் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றால், அவருக்கான பாதுகாப்பை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை கவனித்துக்கொள்ளும். பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடிகள் இருப்பதாக தெரியவந்தால், முதலில் அவர்களே இதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘பிரதமரின் பாதுகாப்பு விஷயங்களில் தமிழக அரசுக்கும் சமமான பொறுப்பு உள்ளது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘நாட்டின் பிரதமர் ரோடு-ஷோ மூலமாக மக்களை நேரடியாக சந்தித்து, இதற்காக ஒதுக்கப்பட்ட குறைந்த நேரத்தில் அவர்களுடன் கலந்துரையாடி, நலத்திட்டங்களை எடுத்துரைக்க விரும்புகிறார். அதேநேரம் பிரதமர் மற்றும் முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகள் என்றால் அது நிச்சயமாக பொதுமக்களின் சுதந்திரமான, அன்றாடப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். இருந்தாலும் அதை ஒரு காரணமாகக்கூறி பிரதமரின் இந்நிகழ் வுக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்க முடியாது.
இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாகனபோக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் போலீஸார் மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முற்படும்போது அவர்களைத் தடுக்க முடியாது.
ஒத்துழைக்க வேண்டும்: இந்த வாகன பேரணி மாலை நேரத்தில் நடைபெறுவதால் மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரதமருக்கான பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்து கொள்வர். அதற்கு மாநில போலீஸாரும் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எனவே பிரதமரின் ரோடு-ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதேநேரம் பேரணி செல்லும்தூரம் மற்றும் வழித்தடத்தை போலீஸார் முடிவு செய்யலாம். வழியில் பேனர்கள் அமைக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம். குறிப்பாக பிரதமரின் பாதுகாப்புக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல், இந்த நிகழ்ச்சி சுமுகமான முறையில் நடைபெறுவதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago