‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ பணிகள் தொடங்கப்பட்டன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தோட்டக்கலை துறை சாார்பில் ரூ.25 கோடியில், 6 ஏக்கரில் கண்ணாடி மாளிகை, சூப்பர் ட்ரீ கோபுரம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் கூடிய ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற தனியார் அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.1000 கோடி மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலம், நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசால் மீட்கப்பட்டு, கடந்த ஆண்டு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின உரையில், சென்னையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில்உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ரூ.25 கோடியில்செயல்படுத்த கடந்த பிப்.29-ம்தேதி அடிக்கல் நாட்டினார். இப்பூங் காவின் கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இப்பணி கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும்.

பல்வேறு சிறப்பம்சங்கள்: இப்பூங்காவில் 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரம் கொண்ட கண்ணாடி மாளிகை அமைக்கப்பட உள்ளது. அதில் வண்ண மலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடில் அமைக்கப்படும். இந்தியாவில் முதன் முறையாக 105 அடி உயரத்தில் சூப்பர் ட்ரீ கோபுரம் 10 மாடிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கோபுரத்தின் மேல் 40 மீட்டர் சுற்றளவில் 100 பேர் நின்று பூங்காவைபார்க்கும் வசதிகள் அமைக்கப் படும்.

மேலும், பூங்காவில் பசுமை நடைபாதை, ரோப்கார் வசதி, அலங்கார கொடி அமைப்பு மற்றும் மலர்களை கொண்ட குகை, கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் நுழைவு பலகைகள், சிறப்பு நுழைவு வாயில் வளைவு, அழகுசெடிகள், கொடிகள், நறுமண பயிர்கள், புல் தரை, மூங்கில் தோட்டம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இப்பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குவதோடு, மாநகரின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும். இவ்வாறு அவர் கூறினர்.

வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமாரவேல் பாண்டியன், வேளாண் துறை இயக்குநர் பி.முருகேஷ், எழிலன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE