மக்களவைத் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அட்டையை ஆட்சியர்களிடம் ஒப்படைக்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்புசங்கத்தின் மாநிலத் தலைவர்டி.கதிரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள மூத்த குடிமக்களாகிய நாங்கள் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வில்லாமல் குறைவான ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.

எங்களுக்கு அரசு அகவிலைப்படி உயர்வு வழங்குவதை நிறுத்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில் அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையிலும், வழங்காமல் அரசும் நிர்வாகமும் முறையீடு செய்து காலம் தாழ்த்தி எங்களை வஞ்சித்து வருகிறது.

எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து, வரும் 18-ம் தேதிதமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக முதல்வர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE