திருச்செந்தூர் கோயில் கட்டிடத்துக்கு அறநிலையத் துறை ரூ.54 லட்சம் வாடகை பாக்கி: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By கி.மகாராஜன் 


மதுரை: திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு அறநிலையத் துறை வழங்க வேண்டிய ரூ.54.35 லட்சம் வாடகை பாக்கியை வசூலிக்கக் கோரிய வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான கட்டிடம் குலவணிகர்புரத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் 1989 முதல் இயங்கி வருகிறது. அறநிலையத்துறை விதிப்படி கோயில் கட்டிடத்தை பயன்படுத்துவதற்கு வாடகை செலுத்த வேண்டும். அதன்படி 1989 முதல் 2011ஆம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டுள்ளது.

2011 முதல் தற்போது வரை வாடகை செலுத்தவில்லை. இந்த 13 ஆண்டுகளில் வாடகை பாக்கியாக ரூ.54.35 லட்சம் செலுத்த வேண்டியதுள்ளது. வாடகை பாக்கி கேட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை வாடகை பாக்கியை செலுத்தவில்லை. எனவே முறையாக வாடகை செலுத்த தவறிய நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுத்து, வாடகை பாக்கியை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் வாதிடுகையில், ''வாடகை பாக்கியை செலுத்த 3 மாத அவகாசம் தேவை'' என்றார். இதையடுத்து நீதிபதி, ''வாடகை பாக்கியை இவ்வளவு காலம் செலுத்தாதது ஏன்? வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்தலாமே? எப்போது வாடகை பாக்கி செலுத்தப்படும் என்பதை அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும்'' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE